அஞ்சாத மன உறுதி, அசராத திறன், அற்புதமான பேட்டிங் தொழில்நுட்பத்தால் சென்னை ரசிகர்களை முதல் ஆட்டத்திலேயே கவர்ந்து இழுத்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே. மகாராஷ்டிர மாநிலம் விரார் பகுதியைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே, கடந்த 20-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே அணிக்காக முதல்முறையாக களமிறங்கி 15 பந்துகளில் 32 ரன்களை விளாசி அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை வசப்படுத்தியுள்ளார்.
முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை விளாசித்தள்ளி பயமறியா சிங்கம் என்பதை நிரூபித்துள்ளார் மாத்ரே. மேலும், சிஎஸ்கே அணிக்காக களமிறங்கிய மிக இளம் வயது வீரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் ஆயுஷ் மாத்ரே பிடித்துள்ளார். அவர் 17 வயது 278 நாட்களான நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். இதற்கு முன்பு, அபிநவ் முகுந்த் 18 ஆண்டு 139 நாட்களான நிலையில் களமிறங்கிய இளம் சிஎஸ்கே வீரர் என்ற பெயரைப் பெற்றிருந்தார்.