புதுடெல்லி: சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, அமெரிக்காவின் கூடுதல் வரி தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சீனா 4,000 சதுர கி.மீ. இந்திய எல்லையை ஆக்கிரமித்துள்ளதாகவும், அமெரிக்க வரி இந்திய பொருளாதாரத்தை முழுவதும் சீரழித்துவிடும் என்றும் தெரிவித்தார்.
மக்களவையில் பூஜ்ய நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: நமது நாட்டு எல்லையில் 4000 சதுர கிலோ மீட்டரை சீனா ஆக்கிரமித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு நமது வெளியுறவு செயலாளர் (விக்ரம் மிஸ்ரி) சீனத் தூதருடன் கேக் வெட்டுவதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். இப்போது கேள்வி என்னவென்றால், உண்மையில் சீனா ஆக்கிரமித்துள்ள அந்த 4,000 சதுர கி.மீ. பகுதியில் என்னதான் நடக்கிறது?