சென்னை: இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தாண்டின் முதல் ராக்கெட் ஏவுதல் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் மூலம் என்விஎஸ் 02 செயற்கைகோள் துல்லியமாக சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த பணி 100வது ஏவுதல், இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல். இன்று வரை நாம் 6 தலைமுறை ஏவுதல் வாகனங்களை உருவாக்கியுள்ளோம். அப்துல் கலாம் 1979ம் ஆண்டு திட்ட இயக்குநராக சதிஷ் தவான் ஏவுதல் மையத்தில் முதலாவது ஏவுதளத்தை உருவாக்கினார். அன்றிலிருந்து இன்று வரை 100 ராக்கெட் ஏவியுள்ளோம். குறிப்பாக 23 டன் எடை கொண்ட 433 வெளிநாட்டு செயற்கைகோள்கள், 120 டன் கொண்ட 113 இந்திய செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்தாண்டு இஸ்ரோவுக்கு பரபரப்பான ஆண்டாக இருக்கும். வரவிருக்கும் மாதங்களில் பல பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. ஒரேநேரத்தில் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா ஜி1 தயாரிப்பு பணிகளில் சிறப்பாக முன்னேறி வருகிறோம். அதேபோல அடுத்த தலைமுறை ஏவுதல் வாகனம் என்ஜிஎல்வி, சந்திரயான் 4 மற்றும் 5 பணிகள், ஹரிகோட்டவின் 3வது ஏவுதளம் மற்றும் குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ஏவுதள வளாகம் உள்ளிட்ட பல பணிகள் முன்னேற்றங்களில் இருந்து வருகிறது.
இஸ்ரோவின் 100வது ராக்கெட் ஏவ 48 ண்டுகள் ஆனது. அடுத்த 5 ஆண்டுகளில் 200வது ராக்கெட் ஏவுதல் என்பது சாத்தியமான ஒன்று தான். நாவிக் தொழில்நுட்பத்திற்காக ஏற்கெனவே 4 செயற்கைகோள்கள் செயல்பாட்டில் உள்ளன. தற்போது 5வது செயற்கைகோள் அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் 3 செயற்கைகோள்கள் அனுப்பப்படும். குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதல் மையம் திறக்கப்பட்ட போது ஒரு சோதனை ராக்கெட் ஏவப்பட்டது. 2 ஆண்டுகளில் குலசேகரபட்டினத்தில் இருந்து தொழில்முறை ராக்கெட் ஏவுதல்கள் செய்யப்படும். 4ம் தலைமுறை ஏவுதல் வாகனத்தில் புதிய உந்துதல் அமைப்பு உள்ளது. இதன்மூலம் 30 டன் எடைகொண்ட ஆய்வுக்கருவிகளை கீழ் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
The post அடுத்த 5 ஆண்டுகளில் 200வது ராக்கெட்: இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி appeared first on Dinakaran.