சென்னை: ‘8 மாவட்டங்களில் 9 இடங்களில் ரூ.184.74 கோடியில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்; 35 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 149 பாசன அமைப்புகளில் புனரமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் மறு கட்டுமானம் செய்யும் பணிகள் ரூ.722.55 கோடியில் மேற்கொள்ளப்படும்’ உள்ளிட்ட அறிவிப்புகளை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசின் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 14-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த இரண்டு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் 17-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு 21-ம் தேதி நிதி அமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் பதில் அளித்திருந்தனர்.