சென்னை: “மத்திய அரசு நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தக் கடன் பெற்றுள்ளது. நீங்கள் வாங்கிய கடன் எதற்காக? உங்கள் கட்சித் தலைவர், அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கேட்ட அதே கேள்வியைத்தான் தற்போது நாங்கள் முன்வைத்திருக்கிறோம். வாங்கிய கடனில் உங்கள் கமிஷன் எவ்வளவு? அல்லது, கமிஷன் வாங்கத்தான் கடனே வாங்குகிறீர்களா என்பதைத் தெளிவுபடுத்துங்கள்” என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கும் கடன்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “இந்த மாதம் 14-ம் தேதி, வரும் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த ஆண்டு நிறைவு பெறும்போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும்.