சென்னை: “அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கும் திமுக-வுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இந்த வழக்கை மூடி மறைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. திராவிட மாடல் அரசில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெண் உயர் கல்வியை சிதைத்து பெண்களை வீட்டினுள் முடக்கும் முயற்சியாகத்தான் எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்கப் பார்க்கிறார்கள்,” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கையை உடனடியாக எடுத்துவிட்டது. இந்த வழக்கை மறைப்பதற்கான அவசியம் தமிழக முதல்வருக்கோ, திமுக அரசுக்கோ கிடையாது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. ஆனால், சில ஊடகங்களிலே, அந்த நபர் திமுகவைச் சேர்ந்தவர் என்பது போலவும், மாணவரணியின் துணை அமைப்பாளர் என்பது போலவும் செய்திகள் வெளியிட்டுள்ளன.