சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி வழக்கறிஞர்கள் வரலட்சுமி மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசு தரப்பில், விசாரணை அறிக்கை சீல் வைக்கப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது.