சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பா.ஜ.வை சேர்ந்த வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது இதேபோன்ற பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழக காவல் துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, இந்த வழக்குகளை சிபிஐ அல்லது, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றுமாறு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபிக் அடங்கிய அமர்வு, ஞானசேகரனுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விரிவான விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 12ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
The post அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம் வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி மனு: தமிழக அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.