சென்னை: “அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனே பிரதானமானது. பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இச்சம்பவம் குறித்து அச்சம் அடைய வேண்டாம். மாணவர்களுக்கான பாதுகாப்புச் சூழலை மேம்படுத்திட வேண்டும்” என்று பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துயர்மிகு பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் – வேந்தர் இன்று (டிச.28) பகல் 12.30 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும், மாணவ – மாணவியர்களுடன் உரையாடவும், நமது மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திட தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்திடவும் வருகை தந்தார்.