புதுடெல்லி: அதானி குழுமங்களின் தலைவர் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி மீதான சுமார் ரூ.2,200 கோடி லஞ்ச ஊழல் புகார் வழக்கில் அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.
இதுகுறித்து, தனது புகாரை அதானிக்கு வழங்கும் நடைமுறைக்காக இந்தியாவின் சட்ட அமைச்சகத்தின் உதவியை நாடி இருப்பதாக நியூயார்க் நீதிமன்றத்தில் அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "ஒழுங்குமுறை ஆணையம், ஹேக் சேவை மாநாட்டு ஒப்பந்தத்தின் கீழ் உதவி கோரியுள்ளது" என்று தெரிவித்துள்ளது. என்றாலும் இதுகுறித்து அதானி குழுமமோ அல்லது சட்ட அமைச்சகமோ உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.