சென்னை: “அதானி நிறுவனத்திடம், தமிழக மின்சார வாரியம் தொடர்ந்து உயர்த்தப்பட்ட விலையான ரூ.7.01 விலையிலேயே மின்சாரம் வாங்கிக் கொண்டு, அதற்காக கடந்த நிதியாண்டில் ரூ.99 கோடி கூடுதல் கட்டணம் பெற்றிருப்பதாக, அதானி நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் போது, எந்த அடிப்படையில், ரூ.5.10-க்கு ஒரு யூனிட் மின்சாரம் என்று திமுக ஆட்சியில் கொள்முதல் செய்வதாக குறிப்பிடுகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது: சிறையில் இருந்து வெளிவந்து அமைச்சர் பொறுப்பேற்ற நாள் முதல், இரவு பகல் என கால நேரம் பார்க்காமல், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு சங்க காலப் பாடல் வரிகளைப் பாடி சமூக வலைதளங்களில் புகழ்பாடிக் கொண்டிருந்த ஜாமீன் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தற்போதுதான் தனது துறைகள் குறித்த நியாபகம் வந்திருக்கிறது.