மதுரை: தமிழகத்தில் அதிகமான சொத்து வரி வசூல் செய்த மாநகராட்சிகள் பட்டியலில், மதுரை மாநகராட்சி மூன்றாம் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட ரூ.254 கோடியை வசூல் செய்ததோடு கூடுதலாக ரூ.4.50 கோடி வசூலித்து மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.
மதுரை மாநகராட்சியில் மொத்தம் 3 லட்சத்து 48 ஆயிரத்து 103 சொத்துவரி நிர்ணயம் செய்யப்பட்ட கட்டிடங்கள் உள்ளன. சொத்து வரி மாநகராட்சியின் பிரதான வருவாய் இனமாக உள்ளது. மத்திய அரசின் நிதிக்குழு மானியம் பெற, தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு சொத்து வரி வசூல் செய்வதற்கு குறிப்பிட்ட தொகை இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், மதுரை மாநகராட்சிக்கு 2024-2025-ம் ஆண்டு நிதியாண்டில் ரூ.254.53 கோடி வசூல் செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த இலக்கை மதுரை மாநகராட்சி எட்டிப்பிடித்ததால் மத்திய அரசின் நிதிக்குழு மானியம் பெறுவதற்கு தகுதி பெற்றது.