மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கைப்பற்றி கோப்பையை வென்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கடைசி மற்றும் 5-வது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 247 ரன்கள் குவித்து மிரட்டியது. அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் விளாசினார். டி20 வடிவில் இந்திய அணியின் 4-வது அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. 248 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 97 ரன்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வியை சந்தித்தது.
போட்டி முடிவடைந்ததும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் கூறியதாவது: இதுபோன்ற டி20 கிரிக்கெட்டைதான் நாங்கள் விளையாட விரும்புகிறோம். ஆட்டத்தை இழந்து விடுவோமோ என்ற பயம் எங்களுக்கு இல்லை. நாங்கள் அதிக ரிஸ்க், அதிக வெகுமதி கொண்ட கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம்.