கொழும்பு: அதிபர் கோத்தபய ராஜபக்சே எந்த சூழலிலும் ராஜினாமா செய்யமாட்டார் என்று இலங்கை அரசு அறிவித்த நிலையில் அங்கு மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. வரலாறு காணாத எரிபொருள் தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு ஆகியவற்றால் வெகுண்டெழுந்த மக்கள், நாடு முழுவதும் கிளர்ச்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனை அடுத்து, இலங்கை அமைச்சர்கள் அடுத்து அடுத்து ராஜினாமா செய்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்று அழுத்தம் இருந்தது. ஆனால் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு தலைமைக் கொறடா ஜான்ஸ்டன் ஃபெர்ணான்டோ எந்தச் சூழ்நிலையிலும் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகமாட்டார் என்று திட்டவட்டமாக கூறினார்.
கோத்தபய ராஜபக்சேவை உடனடியாக பதவி விலக வலியுறுத்தி இலங்கை எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்றத்தை முடக்கிய நிலையில், அதிபர் பதவி விலக வலியுறுத்தி பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பில் ஒன்று திறங்க ஏராளமான பெண்கள், மற்றும் இளைஞர்கள் அதிபர் ராஜபக்சே பதவி விளக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பொருளாதார சீரழிவை தடுக்க தவறிவிட்டதாக கூறி அரசுக்கும், அதிபருக்கும் எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதனிடையே எரிபொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க வலியுறுத்தி கனரக வாகன ஓட்டுநர்களும் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆட்டோ, வேன், டிராக்டர்கள், மற்றும் லாரிகளை மக்கந்துரா நெடுஞ்சாலைகளில் குறுக்கே பல கிலோமீட்டர்கள் தூரத்திற்கு நிறுத்திய ஓட்டுனர்கள், மறியல் போராட்ட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.
இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்களின் கிளர்ச்சி விஸ்வரூபம் எடுத்து வருவதால் கொழும்புவில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அதிபர் மாளிகை, நாடாளுமன்ற வளாகம் மற்றும் அரசு கட்டிடங்களுக்கு பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நெருக்கடி நிலையில் இருந்து இலங்கையை மீட்டுக்கும் முயற்சியாக சிறந்த பொருளாதார மற்றும் நிதி நிபுணர்கள் குழு ஒன்றை அதிபர் ஏற்படுத்தியுள்ளார்.
இந்த குழுவில் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி, உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் சாந்த தேவராஜன், சர்வதேச நாணய நிதியத்தின் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் சர்மினி பூரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கையை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற அதிபரால் களமிறக்கப்பட்டுள்ள இந்த 3 பெரும் இலங்கை தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.