பீஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் கனடா, மெக்சிகோ நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரியும், சீன பொருட்களுக்கு 10 சதவீத வரியும் விதித்தார். சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவும், போதைப் பொருள் கடத்தலை தடுக்கவும் இந்த வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார். இதற்கு பதிலடியாக கனடா, மெக்சிகோ நாடுகள் உடனடியாக அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்தன. இது உலக வர்த்தக போரை தொடங்கி வைத்தது. இந்நிலையில், இந்த வர்த்தக மோதலை மேலும் தீவிரமாக்கும் வகையில், 2 நாட்கள் அமைதியாக இருந்த சீனாவும் தற்போது களத்தில் குதித்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு பொருட்கள் மீது 15 சதவீத வரியையும், கச்சா எண்ணெய், விவசாய இயந்திரங்கள் மற்றும் பெரிய எஞ்சின் கார்கள் மீது 10 சதவீத வரியையும் அமல்படுத்துவதாக சீனா தெரிவித்துள்ளது. இந்த வரிகள் அடுத்த திங்கட்கிழமை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டங்ஸ்டன், டெல்லூரியம், பிஸ்மத், மாலிப்டினம் மற்றும் இண்டியம் உள்ளிட்ட முக்கிய கனிமங்களின் ஏற்றுமதிக்கும் சீனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இது குறித்து சீனாவின் வரிகள் கவுன்சில் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான வரி அதிகரிப்பு உலக வர்த்தக அமைப்பின் விதிகளை கடுமையாக மீறுகிறது. இது அமெரிக்காவின் சொந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு உதவாது. மேலும், சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவை பாதிக்கும்’ என கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் மீதும் விசாரணை தொடங்க உள்ளதாக சீனா கூறியுள்ளது. ஒரே ஒரு நிறுவனத்தின் ஆதிக்கத்தை எதிர்க்கும் சட்டங்களை கூகுள் நிறுவனம் மீறியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என்று சீன அரசின் சந்தை ஒழுங்குமுறை நிர்வாக அமைப்பு கூறி உள்ளது.
2010ம் ஆண்டு முதல் கூகுள் சீனாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும், சில சேவைகளை சீனாவில் இன்னமும் வழங்கி வருகிறது. இதுதவிர, டாமிஹில்பிகர், கால்வின் கெலின் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான பிவிஎச் குழுமம், இல்லுமினா ஆகிய 2 அமெரிக்க நிறுவனங்களையும் சீனா குறிவைத்துள்ளது. அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக மோதல் ஏற்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டிலேயே சீன பொருட்களுக்கு அதிபர் டிரம்ப் வரிகளை உயர்த்தினார். அப்போதே சீனாவும் அமெரிக்காவும் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளன. இந்த முறை, அமெரிக்காவுக்கு வலுவான பதிலடி கொடுக்க சீனா தயாராக உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
* கனடா, மெக்சிகோ வரி 30 நாள் நிறுத்தம்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாமுடன் அதிபர் டிரம்ப் தனித்தனியாக நடத்திய தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து அவ்விரு நாடுகளுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத வரி 30 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்ய அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. கனடா, மெக்சிகோ இருநாடுகளும் சட்டவிரோத குடியேற்றத்தையும், போதைப் பொருள் கடத்தலையும் தடுக்க வலுவான நடவடிக்கை எடுப்பதாக டிரம்பிடம் உறுதி அளித்ததைத் தொடர்ந்து வரி விதிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. எனவே சீனா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகள் மட்டும் நேற்று முதல் அமலுக்கு வந்தன.
The post அதிபர் டிரம்புக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்தது சீனா: கூகுளையும் விசாரிக்கப் போவதாக அதிரடி appeared first on Dinakaran.