பாங்காக்: போராட்டம் நடத்தும் மாணவர்களை கட்டுப்படுத்தும் அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு கீழ்படியாததால் உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த ரூ.19,000 கோடி நிதி நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பல பல்கலைக்கழகங்களில் காசா போர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இவற்றை தடுக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மாணவர்களை கட்டுப்படுத்தும் டிரம்பின் உத்தரவுக்கு இணங்கப் போவதில்லை என உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்தது. இதனால், அப்பல்கலைக்கழகத்திற்கான ரூ.19,000 கோடி நிதி உதவியை நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், ஐநா, நேட்டோ உள்ளிட்ட அமைப்புகளுக்கான நிதியை சுமார் 50 சதவீதம் வரையிலும் குறைக்க அரசு துறைகளுக்கு வெள்ளை மாளிகையின் நிர்வாக மற்றும் பட்ஜெட் அலுவலகம் பரிந்துரைத்துள்ளது. இவை அனைத்தும் அரசின் செலவுகளை குறைக்கும் முயற்சிகளில் ஒருபகுதியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி, பரஸ்பர வரி விதிப்பை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கம்ப்யூட்டர் சிப், மருந்து பொருட்களுக்கு சிறப்பு வரியை விதிக்கவும் முடிவு செய்துள்ளார். அடுத்த ஓரிரு மாதங்களில் எவ்வளவு வரி விதிப்பது என முடிவு செய்து அமெரிக்கா அறிவிக்க உள்ளது. இந்த நடவடிக்கையில் அடுத்த கட்டமாக அமெரிக்க வர்த்தக துறையின் அரசாணையில் சிப், மருந்து பொருட்கள் குறித்த விசாரணை தொடங்குவது குறித்த அறிவிப்புகள் நேற்று வெளியாகின. அதன்படி, கம்ப்யூட்டர் சிப், மருத்துகள் இறக்குமதி தொடர்பாக 3 வாரங்களுக்கு மக்களின் கருத்து கேட்டறியப்பட உள்ளது. கம்ப்யூட்டர் சிப்கள், அவற்றை தயாரிப்பதற்கான உபகரணங்கள், கார், குளிர்சாதனபெட்டி, ஸ்மார்ட்போன் போன்ற அன்றாட பயன்பாட்டு பொருட்களில் உபயோகிக்கப்படும் சிப்புகள் தேசிய பாதுகாப்பை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட இருப்பதாக வர்த்தக துறை தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு உள்நாட்டிலேயே சிப்களை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள், இதில் வெளிநாட்டு உற்பத்தியின் பங்கு குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. இது குறித்து வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் கூறுகையில், ‘‘தேசிய பாதுகாப்பு சார்ந்த பொருட்களை அமெரிக்காவிலேயே தயாரிப்பை உறுதி செய்வதன் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. செமிகண்டக்டர்களை இங்கேயே உருவாக்க வேண்டும், மருந்துகளும் இங்கேயே தயாரிக்கப்பட வேண்டும். எனவே மருந்து இறக்குமதிகளுக்கு அதிக வரி விதிக்கப்படும். சிப், மருந்துகளுக்கான வரி குறித்து யாருடனும் எந்த பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் தயாராக இல்லை’’ என்றார்.
அமெரிக்க தயாரிப்பு மருந்துகளில் பயன்படுத்தப்படும் மருந்து பொருட்களில் 70 சதவீதம் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா போன்ற நாடுகளில் தயார் செய்து இறக்குமதி செய்யப்படுகின்றன. உலகளவில் தயாரிக்கப்படும் அனைத்து மருந்துகளிலும் ஐந்தில் ஒரு பங்கை அமெரிக்கா உற்பத்தி செய்கிறது. அதில் வேறு எந்த நாட்டையும் விட அதிகமாக அமெரிக்கா சுமார் 45 சதவீதத்தை பயன்படுத்துகிறது. இதே போல செமிகண்டக்டர்களின் முக்கிய உற்பத்தியாளராக அமெரிக்கா இருந்தாலும் சில துறைகளுக்கான சிப்களை மட்டுமே தயாரிக்கிறது. முக்கிய சிப்களுக்கு பெரும்பாலும் தைவான், தென் கொரியாவையே சார்ந்துள்ளது.
போயிங் ஜெட் விமானம் வாங்குவது நிறுத்தம்
சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145 சதவீதமாக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், போயிங் நிறுவனத்திடமிருந்து ஜெட் விமானங்கள் வாங்குவதை நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு தெரிவித்திருப்பதாக ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து விமான உதிரி பாகங்கள் வாங்குவதையும் நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அமெரிக்காவுக்கு கனிமங்கள், முக்கிய உலோகங்கள், காந்தம் போன்ற பொருட்களின் ஏற்றுமதியையும் சீனா நிறுத்தியுள்ளது.
இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள், பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவையான மூலக்கூறுகள் முற்றிலும் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, கார்கள் முதல் ஏவுகணைகள் வரை தயாரிக்க தேவையான காந்தங்கள் மற்றும் மூலக்கூறுகளின் ஏற்றுமதி சீன துறைமுகங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
The post அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு கீழ்படியாததால் ஹார்வர்ட் பல்கலைக்கான ரூ.19,000 கோடி நிதி நிறுத்தம்: அமெரிக்காவில் பரபரப்பு appeared first on Dinakaran.