‘தேர்தல்களின் ஆண்டு’ என்று உலக அளவில் விளிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலும் மாநில சட்டமன்றத் தேர்தல்களும் பல திருப்புமுனைகளுக்கு வழிவகுத்தன. சில சறுக்கல்கள் நேர்ந்தாலும், பாஜக தனது பலத்தைப் பறைசாற்றிக்கொண்ட ஆண்டு இது. இண்டியா கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமையும் ஒற்றுமையின்மையும் மாறி மாறி நிலவிவந்தது அதன் பின்னடைவுக்குக் காரணமானது.
பயணங்களும் திருப்பங்களும்: பிப்ரவரி 27இல் நடந்த மாநிலங்களவைத் தேர்தலிலேயே தனது வெற்றிக் கணக்கை பாஜக தொடங்கியிருந்தது. காங்கிரஸ் ஆட்சி நடக்கும் இமாச்சலப் பிரதேசத்தின் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கட்சி மாறி வாக்களித்தனர். உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏக்களும் காலை வாரினர். மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்தது. 240 பேர் கொண்ட மாநிலங்களவையின் பெரும்பான்மைக்கு (121) இன்னும் நான்கு உறுப்பினர்கள்தான் தேவை என்ற நிலைக்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணி வந்தது.