மூன்று வழித்தடங்களில் அதிவேக ரயில் சேவையை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கும் நடவடிக்கை, ரயில் பயணிகளின் வயிற்றில் பால் வார்க்கும் செயலாக அமைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் ரயில்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ரயில்களின் சேவையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் மத்தியில் எழுந்து வருகிறது. இருக்கும் வழித்தடங்களில் அதிகபட்சமாக எவ்வளவு ரயில்களை இயக்க முடியுமோ, அவ்வளவு ரயில்களை இயக்கி வருகிறோம் என்று ரயில்வே அதிகாரிகளும் விளக்கமளித்து வருகின்றனர். அவர்களது இயலாமையை புரிந்து கொள்ள முடிந்தாலும், அதிகரித்துவரும் தேவையை பூர்த்தி செய்ய வழிகாண வேண்டும், புதிய வழித்தடங்களை உருவாக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் வாய்ப்பு வரும்போதெல்லாம் குரல் கொடுத்து வருகின்றனர். தினசரி இயங்கும் ரயில்களில் இடம் காலியில்லை என்ற நிலையில், கூடுதலாக எத்தனை சிறப்பு ரயில்கள் அறிவித்தாலும் கூட்டம் நிரம்பி வழியும் நிலையே நீடிக்கிறது.