1948-ல் டார் கமிஷனும், 1954-ல் பசல் அலி கமிஷனும் நம்முடைய எல்லைகளை ஒழுங்குபடுத்தினாலும், நமக்கு சரியான நீதி கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம். 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தமிழகத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு ஏறத்தாழ 69 ஆண்டுகள் ஆகிவிட்டன. இது நமக்கு மகிழ்ச்சியா? துக்கமா? என்று சொல்ல முடியாது. பல பகுதிகளை இழந்துள்ளோம். சில பகுதிகளை பெற்றுள்ளோம். இதனால் நமக்கு நதிநீர் மற்றும் வன வளங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த எல்லைகள் வரையறுக்கப்பட்ட நாளை கேரளம் ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி ‘நவ கேரளம்’ அல்லது ‘ஐக்கிய கேரளம்’ என்று கொண்டாடி வருகிறது. கர்நாடகம் ‘சம்யுக்த கர்நாடகம்’ என்றும், ஆந்திரம் ‘விசாலா ஆந்திரம்’ என்று கொண்டாடுகிறது. அதேபோல் மகாராஷ்டிராவில் ‘மகா மகாராஷ்டிரா’ என்றும், குஜராத்தில் ‘சம்யுக்த குஜராத்’ என்றும் கொண்டாடப்படுகிறது. ஆனால், நாம் மட்டும் நவ.1-ம் தேதியைக் கொண்டாடாமல், அண்ணா ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய நாளான ஜூலை 18-ம் தேதியை ‘தமிழ்நாடு நாள்’ என்று இன்றைக்கு கொண்டாடுகின்றோம்.