தேர்தல்களில் பிரபலமானவர்கள் எதிர்பாராத தோல்வியைத் தழுவுவது வழக்கமான கதைதான். அந்த வகையில், அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் நடிகரும், இந்தி பிக்பாஸ் போட்டியாளரும், பிரபல ‘இன்ஃப்ளூயன்ச’ருமான அஜாஸ் கான் வெறும் 155 ஓட்டுகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.
ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) சார்பில் வெர்சோவா தொகுதியில் அஜாஸ் கான் போட்டியிட்டார். 18 சுற்றுகள் எண்ணப்பட்ட பிறகும் 200 ஓட்டுகளைக்கூட அவர் தொடவில்லை. இது சமூக வலைதளங்களில் வைரலானது. குறைவான வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தது பேசுபொருளானாலும், அஜாஸ் கானின் இன்ஸ்டகிராம் பக்கத்தை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர் என்பதுதான் அதிர்ச்சித் தகவல்.