அன்றைக்கு வீடுகள் எல்லாம் பெரும்பாலும் கற்கள் வைத்துதான் கட்டப்பட்டன. மலையில் இருந்து கற்களைக் கொண்டு வந்து, பின்னர் அதை சதுரமாக வெட்டி அதைக் கொண்டு வீடு கட்டினார்கள். ஒருசிலரே செங்கலைப் பயன்படுத்தினார்கள். அதேபோல் எங்கள் பகுதியில் காளவாசலில் இருந்து சுண்ணாம்பு வாங்கி வந்து, அதனுடன் சரியான விகிதத்தில் மணலைக் கலந்து கட்டிடப் பணிக்கு பயன்படுத்துவார்கள். அப்போதெல்லாம் சிமென்ட் பயன்பாடு அவ்வளவாக இல்லை.
சுவரைப் பூச வேண்டுமென்றால், பெரிய அம்மியில் சுண்ணாம்பு மற்றும் மணல் கலவையைப் போட்டு அரைப்பார்கள். சாந்து போன்று வரும். அதைக் கொண்டு பூசி விடுவார்கள். சுவர்களில் சன்னல் அமைப்பார்கள். அதேபோல் மேற்கூரைக்கு கீழே சின்ன சின்ன பாட்டு சன்னல்களை வைப்பார்கள். அதில் இருந்து காற்றும் வெளிச்சமும் வரும்.