புதுடெல்லி: "பொருள்கள் பாதுகாப்பு அறையில் நானோ எனது குடும்பத்தினரோ எந்த பணத்தையும் வைக்கவில்லை" என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தெரிவித்துள்ளார். மேலும் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக கூறப்படுவதை அவர் கடுமையாக மறுத்துள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்தியாய்க்கு, நீதிபதி வர்மா எழுதி இருக்கும் பதில் கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள கேட்டுக்கொண்டிருந்தார். நீதிபதி வர்மா தனது விளக்கக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: "அந்த பணம் குறித்து எனக்கோ எனது குடும்பத்தாருக்கோ எதுவும் தெரியாது. அந்தப் பணத்துடன் எங்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. துரதிருஷ்டவசமாக அன்றைய இரவில் எடுத்ததாகக் கூறப்படும் பணம் எனது உறவினர்களிடமோ, பணியாளர்களிடமோ காட்டப்படவில்லை.