சென்னை: “கட்சியினர் சுற்றி நிற்க, ஊடகங்களில் வாய்ச்சவடால் பேச்சு பேசும், அண்ணாமலை, வரும் மார்ச் 5-ம் தேதி அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் வந்து பேசட்டும், அவரது கேள்விகள் அனைத்துக்கும் விரிவான, விளக்கமான பதில் கிடைக்கும்,” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாிநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையால், தமிழகத்துக்கு ஏற்படும் இழப்புகளை எதிர்கொள்ள, தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் அழைப்பு அனுப்புவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். பாஜக, கூட்டத்தில் பங்கேற்று, தனது கருத்துகளை தெரிவிக்கலாம் ஆனால், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஊடகங்களில் முதல்வர் பற்றி அருவெறுப்பான, தரம் தாழ்ந்து பேசிய, அநாகரிக செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.