சென்னை: தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணை: 2024-2025ம் ஆண்டிற்கான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II விரிவான வழிகாட்டுதல்களுடன் மாநில நிதியில் இருந்து ரூ.250 கோடி உட்பட 1147.28 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் தவணையாக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II செயல்படுத்த மாநில நிதியில் இருந்து ரூ.62.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் செலவில் வரையறுக்கப்பட்ட நிதி பிரிவிலிருந்து இப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும். பகுதி பணியாக இல்லாமல் முழுமையான பணியாக இருத்திடல் வேண்டும். இதற்காகவே குறைந்தபட்ச தொகையாக ரூ.3 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுமையான பணி என்பது வரத்து வாய்க்கால், வடிகால் வாய்க்கால், தூர் வாருதல், குளியலுக்கான படித்துறை மற்றும் தடுப்புச் சுவர் போன்ற பணிகளின் தொகுப்பாக இருத்திடல் வேண்டும். பணிகளை தேர்வு செய்யவும், அதனை செய்து முடிக்கவும் கீழ்கண்ட வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
அதன் விவரம்:
* கிராமத்தில் உள்ள மக்கள் பெரும்பான்மையாக பயன்படுத்தும் குளம், ஊரணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தனியாருக்கு சொந்தமான குளம் ஊரணியை தேர்வு செய்யக் கூடாது.
* சில கிராம ஊராட்சிகளில் குட்டை, ஊரணி இருக்காது. அவ்வாறான இடங்களில் நிலம் இருப்பின், ஒரு புதிய குட்டை, ஊரணி அமைக்க பணி மேற்கொள்ளலாம். அதற்கு வாய்ப்பு இல்லையாயின், கோயில் குளங்கள், சிறுபாசன குளம் இருப்பின் அவற்றை எடுக்கலாம்.
* விரைந்து பணிகளை முடிக்கவும், முழுமையாக செய்யவும், இயந்திரங்கள் பயன்படுத்துவது இத்திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்படுகிறது.
* தூர் முழுமையாக அகற்றப்படும் வரை குளங்கள் ஆழப்படுத்துதல் நடைபெற வேண்டும். குளத்தில் ஊரணியில் கணிசமான அளவு நீர் தேங்குவதை உறுதிப்படுத்த குறைந்தபட்சம் ஏற்கெனவே உள்ள ஆழத்தைவிட 2 மீட்டர் ஆழப்படுத்தி, நீர் தேங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
* மழை காலங்களில் கரை அரிக்கப்படாமல் இருக்கவும், அகற்றப்பட்ட மண் குளத்தில் மீண்டும் சேராமல் இருக்கவும் குளத்தில் இருந்து அகற்றப்பட்ட மண் குளக்கரையின் வெளிப்பகுதியில் போடப்பட்டு, இறுக்கம் செய்யப்பட வேண்டும்.
* சிறுபாசனக் குளங்களில் சிறு குளம் அமைக்கப்பட தேவையில்லை. குளங்களின் வரத்து வாய்க்கால் மற்றும் வடிகால்களில் தூர் எடுப்பதை, குளங்கள்/ ஊரணியில் தூர் எடுப்பதுடன் சேர்த்து மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு தார் சாலை, குளங்கள் சீரமைக்க ரூ.62.50 கோடி ஒதுக்கி அரசாணை appeared first on Dinakaran.