மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து பேருந்துகளிலும் பயணச்சீட்டு கருவி பயன்பாட்டுக்கு வரும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திலும், விரைவு போக்குவரத்துக் கழகத்திலும் கடந்த ஆண்டு பிப்.28-ம் தேதி மின்னணு பயணச்சீட்டு கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது கருவி அறிமுகமாகி ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. இந்நிலையில், கருவி மூலம் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இதுவரை 67.80 கோடிக்கும் மேலான பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 15.18 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணச்சீட்டுகள் டிஜிட்டல் பரிவர்த்தனையில் கீழ் வழங்கப்பட்டுள்ளன. விரைவு பேருந்துகளில் வழங்கப்பட்ட 1.60 கோடிக்கும் மேலான பயணச்சீட்டுகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணச்சீட்டுகள் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம், கும்பகோணம் கோட்டங்களில் முழுமையாக பயணச்சீட்டு கருவி அமலில் உள்ளது. சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி கோட்டங்களில் முழுமையாக மார்ச் மாத இறுதிக்குள் மின்னணு பயணச்சீட்டு கருவி பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.