சென்னை: அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம் வழங்கிடும் வகையில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தக்க சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு – தமிழ்நாடு (திருவள்ளூர் கிளை, பதிவு எண். 6/77) சங்க பிரதிநிதிகளால், புத்தக கட்டுநர் பயிற்சி (Book Binder Training) முடித்த அனைவருக்கும் அரசு வேலை வழங்கிட கோருதல் உள்ளிட்ட 6 கோரிக்கைகள் குறித்து 17.03.2025 அன்று முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பார்வை மாற்றுத்திறனாளிகளின் முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக கீழ்க்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்படுகிறது.
* எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் புத்தக கட்டுநர் பதவியில் பணிபுரியும் 359 நபர்களில் 126 பார்வை மாற்றுத்திறனாளிகள் பணிபுரிந்து வருவதால், அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கும் அதிகமாக 34 சதவிகிதம் பார்வை மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
* பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பொது நூலகங்களில் உள்ள நூல் கட்டுநர் மற்றும் நூல் கட்டுநர் உதவியாளர் காலி பணியிடங்களில் 32 புத்தக கட்டுநர் பணியிடங்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு அரசாணை (4டி) எண்.5 பள்ளி கல்வித் (பொ.நூ.1)துறை நாள் 29.11.2021 ன் படி நிரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
* நவீன காலத்திற்கேற்ப பொது நூலகங்களில் உள்ள நூல்கள் மின்மயமாக்கப்பட்டு வருவதாலும், அச்சகங்களில் நவீன ரக இயந்திரங்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுவதாலும் புத்தக கட்டுநர் பயிற்சிக்கு மாற்றாக வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் புதிய பயிற்சிகளை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
* பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயிலும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் கல்வி பயில்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் சமூக பொறுப்பு நிதியிலிருந்து 429 மடிக்கணிணிகள் கொள்முதல் செய்வதற்கு ரூ. 2 கோடியே 35 இலட்சம் பெறப்பட்டது. இதில் முதற்கட்டமாக 50 மடிக்கணிணிகள் கொள்முதல் செய்யப்பட்டு மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்களால் 02.12.2024 அன்று வழங்கப்பட்டது. மீதமுள்ள 379 மடிக்கணிணிகள் விரைவில் வழங்கப்படும்.
* மேலும், கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களில் சிறப்பு ஆட்சேர்ப்பு நேர்காணல் மூலம் 4 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
* பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சியை தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கிட நிறுவனங்கள் Empanel செய்யப்பட்டுள்ளன.
* குறிப்பாக, மருத்துவமனைகள் / நிறுவனங்களில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிட சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், மதுரை மற்றும் கன்னியாகுமரியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகள் வாயிலாக திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (TNSDC) மூலம் Telemedicine திறன் பயிற்சி வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* தனியார் நிறுவனங்களில் பிரத்யேகமாக மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு (Mega Job Fair) வழங்கிடும் வகையில் கீழ்கண்டவாறு மண்டல வாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் 2024-2025 ஆம் நிதியாண்டில் நடத்தப்பட்டன. இம்முகாகளின் மூலம் மதுரையில் 179, திருச்சியில் 143, கோயம்புத்தூரில் 150, சேலத்தில் 147 என மொத்தம் 619 மாற்றுத்திறனாளிகளுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
* தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கீழ் செயல்படும் சிறப்பு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்பிடுதல் தொடர்பாக, 10 பார்வை திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் 22 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் எதிர்நோக்கப்படுகிறது. 6 பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தீர்ப்பு பெறப்பட்டவுடன் பணியிடங்கள் நிரப்பப்படும். 1 அமைச்சுப் பணியிடம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 1 பார்வை மாற்றுத்திறனாளி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொகுதி-டி பணியிடங்களில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள், கருணை அடிப்படையில் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலமும், நேரடி நியமனம் மூலமும் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதர தொகுதி-டி பணியிடங்கள் வெளி முகமை மூலம் நிரப்பப்பட உள்ளன.
இவ்வாறாக இத்துறையானது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய தலைமையில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வரும் நிலையில், அவர்களுக்கு மணிமகுடம் வழங்குவது போல், மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பதற்கும் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாக திகழ்வதற்கும், மாநிலத்திலுள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிடும் வகையில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தக்க சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
The post அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம் appeared first on Dinakaran.