பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும் தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையில் வெடித்த மோதல் உடனடியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி என அன்புமணி முடிவெடுத்ததிலிருந்தே இருவருக்குமான பனிப்போர் தொடங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
தேர்தல் அரசியலுக்கு வந்தது முதலே சட்டமன்றத்திலும், மக்களவையிலும் பாமக-வுக்கான பிரதிநிதித்துவம் இருக்குமாறு பார்த்துக் கொள்வார் ராமதாஸ். தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணியை மாற்றுவதாக வரும் விமர்சனங்களை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் கட்சியை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துவதிலேயே குறியாக இருந்தார் ராமதாஸ்.