இந்தியா – மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே டெல்லி டெஸ்ட் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜெய்ஸ்வால் சதமெடுக்க சாய் சுதர்ஷன் 87 ரன்களுக்கு அவுட் ஆக, இந்தியா பெரிய ஸ்கோரை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், 1948-ல் இதே டெல்லியில் முதல் டெஸ்ட் போட்டியை ஆடிய மே.இ.தீவுகள் அணியை நினைவுகூராமல் இருக்க முடியாது. அப்படி நினைவுகூர்வது உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு வேதனைதானே தவிர இன்றைய மே.இ.தீவுகளை அடித்து நொறுக்கும் இந்திய அணியைக் கொண்டாடுவதாக அமையாது.
சுதந்திரம் பெற்ற பிறகான முதல் டெஸ்ட்டும் அந்த டெல்லி டெஸ்ட்தான். இன்றைய தினமான அக்டோபர் 10, ஆனால் 1948-ல் அந்த டெஸ்ட் தொடர் தொடங்கியது. அந்த மே.இ.தீவுகள் அணிக்கு கேப்டன் ஜான் கோடார்ட். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் அது. அப்போதுதான் மே.இ.தீவுகளின் புகழ்பெற்ற, அருமைபெருமைக்குரிய Three W's என்று பிற்பாடு கொண்டாடப்பட்ட எவர்டன் வீக்ஸ், ஃபிராங்க் வொரல், கிளைட் வால்காட் கிரிக்கெட் உலகின் ஆர்வத்தைத் தூண்டினர்.