சல்மான் கான் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்திப் படம், ‘சிக்கந்தர்’. இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் சத்யராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். காஜல் அகர்வால், சர்மான் ஜோஷி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் வரும் 30-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது நடிகர் சத்யராஜ் பேசும்போது கூறியதாவது:
கடந்த 47 ஆண்டுகளாகத் திரைப்படத் துறையில் இருக்கிறேன். சுமார் 258 படங்களில் நடித் திருக்கிறேன். நக்கலான வில்லனாக என் வாழ்க்கையைத் தொடங்கினேன். அப்போது அது டிரெண்ட் செட்டராக இருந்தது. பிறகு ஹீரோ வாய்ப்பு கிடைத்தது. ஹீரோவாக 100 படங்களில் நடித்திருக்கிறேன். இப்போது இதில், மீண்டும் வில்லனாகி இருக்கிறேன். இதிலும் நக்கல் நையாண்டி வில்லனாக என்னை மாற்றியிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நன்றி. இதில் சல்மான் கானுடன் நடித்திருக்கிறேன். அதைவிடச் சிறப்பு, அவர் தந்தை, பிரபல ஸ்கிரிப்ட் ரைட்டர் சலீம்கானை சந்தித்தது.