சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை:டாஸ்மாக்கின் விசாரணைக்கு அமலாக்கத் துறைக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் வழக்கில், உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது கூட்டாட்சி தத்துவத்தை மீண்டும் நிலை நிறுத்தி உள்ள செயலாகும்.
திமுகவை அச்சுறுத்த ஒன்றிய அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ போன்ற அரசு நிறுவனங்களை கொண்டு சோதனை நடத்துவது, வழக்கு தொடுப்பது என்று தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் மீது அதாவது தமிழ்நாடு அரசு நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்து அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தி வந்தது. இதனை எதிர்த்த வழக்கில் நீதிமன்றம் வழங்கி இருக்கிற தீர்ப்பும், எழுப்பிருக்கிற கேள்வியும் ஒன்றிய அரசுக்கு விடுத்த மிகப்பெரிய எச்சரிக்கையாகும்.
இதனை மோடி- அமித்ஷா கூட்டணி எண்ணிப் பார்த்து இதன் பிறகாவது தங்களுடைய இப்படிப்பட்ட அரசியல் இழி செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெற உள்ள அமோக வெற்றியினை தடுத்து நிறுத்திட இப்படிப்பட்ட கோழைத்தனமான செயல்களில் ஒன்றிய அரசு ஈடுபடுவது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புவோமாக. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் தடை கூட்டாட்சி தத்துவத்தை நிலை நிறுத்தும் நடவடிக்கை: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி வரவேற்பு appeared first on Dinakaran.