பெங்களூரு: பாப்புலர் ஃப்ரண்ட்-ன் வங்கிக்கணக்கை தற்காலிகமாக முடக்கிய அமலாக்கத்துறையின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயக உரிமை மறுப்பு என அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட்டின் வங்கிக் கணக்குகளை தற்காலிகமாக முடக்கிய அமலாக்கத்துறையின் நடவடிக்கையை கண்டித்து பெங்களூரில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற அந்த அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் அனிஸ் அஹமது கூறியதாவது:
பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்குகளை அமலாக்க இயக்குனரகம் (ED) தற்காலிகமாக முடக்கியதை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. அமலாக்கத்துறையின் இந்த சமீபத்திய நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளாக அமைப்புக்கு எதிராக எடுக்கப்பட்ட அடக்குமுறைகளின் ஒரு பகுதிதான். மக்கள் இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் மற்றும் நாட்டிலுள்ள ஆளும் கட்சியை விமர்சிக்கும் எந்த ஜனநாயகக் குரல்களையும் ஒடுக்குவதற்கு அரசியல் எஜமானர்களின் கைக்கூலியாக இது போன்ற ஏஜென்சிகள் செயல்படுகிறது என்பது மீண்டும் தெளிவாகிறது.
பாப்புலர் ஃப்ரண்ட் போன்ற தேசிய அளவில் பரந்து விரிந்துள்ள சமூக இயக்கத்தின் செயல்பாட்டிற்கு 13 ஆண்டுகளில் அமலாக்கத்துறையின் கூற்றுப்படி சொல்லப்பட்டுள்ள வைப்புத்தொகை என்பது சாதாரணமானது.
பாப்புலர் ஃப்ரண்ட் முன்னுதாரணமான பல நிவாரணம், மீட்பு பணிகள் மற்றும் சேவைகளை செய்து நாடு எதிர்கொண்ட பெரும் பேரிடர்களுக்காக மக்களிடம் நிதி வசூலித்த வைப்புத்தொகையும் இந்த தொகையில் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமலாக்கத்துறை கூறியுள்ள புள்ளிவிபரங்கள் வியப்பளிப்பதாக இல்லை,
மேலும் அமலாக்கத்துறை போன்ற ஏஜென்சிக்கு பெரிய விசாரணை எதுவும் தேவையில்லை. ஏனெனில் நாங்கள் ஒவ்வொரு பைசா நிதி வசூலையும் ஏற்கனவே வருமான வரித் துறைக்கு தாக்கல் செய்துள்ளோம்.
புள்ளிவிபரங்களை தெரிவித்து ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்துவதை தவிர வேறில்லை என்பதை நேற்றைய நிகழ்வுகள் நிரூபிக்கிறது. கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான உண்மை என்னவெனில், 2020 ஆம் ஆண்டு பாப்புலர் ஃப்ரண்ட் 120 கோடியை வசூலித்தது என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. தற்போது 60 கோடி என அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருப்பதன் மூலம் அவர்களே தங்களது முந்தைய போலிக் கூற்றை நிராகரித்துள்ளனர்.
இந்த ஏஜென்சிகள் நம்மைப் போன்ற அமைப்புகளை குறிவைத்து ஊடகங்களுக்கு போலியான தகவல்களை வழங்குகின்றன என்பதை இந்நிகழ்வும் மீண்டும் நிரூபித்துள்ளது.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல், கிரீன் பீஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற அரசு சாரா நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளும் இதே முறையில் முடக்கப்பட்டன. புலனாய்வு வடிவிலான அமலாக்கத்துறையின் பழிவாங்கலுக்கு பயந்து, அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த ஊழல் அரசியல்வாதிகளும் தங்கள் கறைபடிந்த சொத்துக்களைக் காப்பாற்ற பாஜகவில் சேரும் ஒரு போக்கு ஏற்கனவே நாட்டில் உள்ளது.
பாஜக தலைவர்களின் ஊழல் மற்றும் கருப்புப் பண பரிவர்த்தனைகள் கோடிகளுக்கு மேல் இருந்தபோதும் அமலாக்கத்துறைக்கு அதுபற்றி எந்த கவலையும் இல்லை. அரசுக்கு எதிரான எதிர்ப்புக் குரல்களை குறிவைத்து மௌனமாக்க அமலாக்கத்துறை மற்றும் பிற அமைப்புகளை பாஜக எப்போதுமே தவறாகப் பயன்படுத்துகிறது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு ஜனநாயக ரீதியில் செயல்படும் அமைப்பாகும். இது ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்த மக்களிடமிருந்து உருவானது மற்றும் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் நம்பிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் வென்றுள்ளது. எனவே மக்கள் எங்கள் அமைப்புக்கு தங்கள் நன்கொடைகள் மூலம் உதவுகிறார்கள். இந்த காரணத்திற்காக அமைப்பானது ஆரம்பத்தில் இருந்தே எந்தவொரு சிறிய மற்றும் பெரிய நிதி பரிவர்த்தனைகளையும் வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்படுவதை ஒரு கொள்கையாகக் கொண்டுள்ளது.
சங்பரிவார அமைப்புகளின் பிரித்தாளும் அரசியலுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் எடுத்துள்ள சமரசமற்ற நிலைப்பாடுதான் இந்த அமைப்பை அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்குகளில் சிக்க வைப்பதற்கான ஒரே காரணம் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
ஆர்எஸ்எஸ்-ன் தீய திட்டங்களுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டையும், எதிர்ப்பையும் பாப்புலர் ஃப்ரண்ட் தைரியமாக எதிர்கொள்ளும். அமலாக்கத்துறையின் இதுபோன்ற செயல்கள் எங்களை ஒருபோதும் அச்சுறுத்தாது. இந்தத் தடைகளை முறியடிக்க அனைத்து சட்ட மற்றும் ஜனநாயக வாய்ப்புகள் குறித்தும் நாங்கள் ஆராய்வோம்.
பாஜக தலைமையிலான மத்திய அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் கண்டிக்க வேண்டும் என்று ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ள நாட்டு மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு விடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.