மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவின் தாக்குதலால் நிலைகுலைந்திருக்கும் உக்ரைன், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் புதிய நிலைப்பாட்டால் புதிய சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. இது உலக அளவில் வேறு சில பின்னடைவுகளுக்கு இட்டுச்செல்லக்கூடும் என்கிற அச்சமும் எழுந்திருக்கிறது.
ரஷ்யாவால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, நேட்டோ அமைப்பில் உறுப்பினராகச் சேர உக்ரைன் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, 2022 பிப்ரவரி 24இல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கியது. உக்ரைனில் 40,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். ஏராளமான ரஷ்ய வீரர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உக்ரைனின் பொருளாதாரம் நிலைகுலைந்திருக்கிறது.