வாஷிங்டன்: பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸ்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களின் கொள்கைகளை சமூக ஊடகங்களில் பரப்பியதாகவும் இந்திய மாணவர் ஒருவரை அமெரிக்க அரசு கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இந்திய மாணவரான பதர் கான் சூரி ஜார்ஜ்டவுன் பல்கலை.யில் படித்துவருகிறார்.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு பதர் கான் தீங்கு விளைவிப்பதாக கருதி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அவரை நாடு கடத்த முயல்வதாக பதர் கான் சூரியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “பதர் கானை வெர்ஜினியாவின் ரோஸ்லினில் உள்ள அவரின் வீட்டில் வைத்து மத்திய புலனாய்வு நிறுவனத்தினர் கைது செய்தனர். தற்போது அவர், லூசியனாவின் அலெக்ஸாண்ட்ராவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். குடியுரிமை நீதிமன்ற விசாரணை தேதிக்காக காத்திருக்கிறார்.” என்றார். இதனிடையே பதர் கானை கைது செய்ததற்கான காரணம் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்வில்லை என்றும், அவர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டது தங்களுக்கு தெரியாது என்றும் பல்கலை. செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.