பனாமா சிட்டி: அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் சட்ட விரோதமாக குடியேறியவர்களை அங்கிருந்து வெளியேற்றி வருகிறார். சட்ட விரோத குடியேறிகள் 300 க்கும் மேற்பட்டோரை பனாமா,கோஸ்டாரிகா நாடுகளுக்கு அனுப்பி உள்ளனர். இதில் இந்தியர்கள் உள்ளிட்ட ஆசிய நாட்டினர் அதிகமாக உள்ளனர்.
இந்நிலையில், பனாமாவில் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 65 பேரை பனாமா சிட்டிக்கு நேற்றுமுன்தினம் பஸ்சில் அழைத்து வந்தனர்.அங்கு வந்ததும் 30 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தான்,சீனா,ரஷ்யா உள்ளிட்ட நாட்டினர் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர்.
பஸ்சில் அழைத்து வரப்பட்டவர்களுக்கு தங்கும் வசதி உள்ளிட்ட எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர். சிலர் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி செல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ளனர். அதனால் அவர்களை கொலம்பியா எல்லையில் உள்ள முகாமுக்கு அனுப்பி உள்ளனர். அதிகாரிகள் கூறுகையில்,‘‘புலம் பெயர்ந்தவர்கள் தேவைப்பட்டால் மேலும் 60 நாட்கள் வரை தங்குவதற்கு நீட்டிப்பு அளிக்கப்படும்’’ என்றனர். புலம் பெயர்ந்தவர்களுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்காமல் இருப்பது மனித உரிமை விதிகளை மீறிய செயலாகும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அவர்களை 3வது நாட்டுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்து தருவதாக சர்வதேச உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் அவர்களுடைய நாட்டுக்கு திரும்பி செல்ல மறுத்து விட்டனர் என்று பனாமா தெரிவித்துள்ளது.
The post அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட சட்ட விரோத குடியேறிகள் வெளியேற பனாமா கெடு appeared first on Dinakaran.