வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியுரிமை பெற வேண்டுமானால் ரூ.43 கோடி கொடுத்தால் ‘கோல்டு கார்டு’ அங்கீகாரம் வழங்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளதால், கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்த 10 லட்சம் இந்தியர்கள் நிலை என்னாகும்? என்பது கேள்வியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே, குடியுரிமை விசயத்தில் பல கட்டுபாடுகளை விதித்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவ்வாறு சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 330க்கும் மேற்பட்ட இந்தியர்களை நாடு கடத்தினார். இந்நிலையில் ஓவல் அலுவலகத்திற்கு வந்த அதிபர் டிரம்ப், தங்க அட்டை (கோல்டு கார்டு) திட்டத்தை தொடங்கி வைத்து, அதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் அளித்த பேட்டியில், ‘வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் வந்து தங்குவோருக்கான கோல்டு கார்டு (தங்க அட்டை) திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இத்திட்டத்தின்படி சுமார் $5 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் 43 கோடி) செலுத்துவோருக்கு கோல்டு கார்டு வழங்கப்படும். தற்போது நடைமுறையில் இருக்கும் கிரீன் கார்டுகளில் இருக்கின்ற வசதிகளுடன், கூடுதலாக பிற சலுகை மற்றும் வசதிகளுடன் கோல்டு கார்டு உருவாக்கப்படும். இந்தத் திட்டம் அடுத்த இரண்டு வாரங்களில் தொடங்கப்படும். கோல்டு கார்டு திட்டமானது, தற்போதுள்ள நடைமுறையில் இருக்கும் இபி-5 திட்டத்திற்கு மாறானதாக இருக்கும். பொதுவாக நடைமுறையில் இருக்கும் இபி-5 திட்டத்தின் கீழ், புலம்பெயர்ந்த முதலீட்டாளர்கள் அமெரிக்க வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். காலப்போக்கில் அவர்கள் கிரீன் கார்டுகளைப் பெறலாம்.
கோல்டு கார்டுகளுக்காக வசூலிக்கப்படும் பணமானது, நேரடியாக அமெரிக்க கருவூலத்திற்கு சென்றுவிடும். நாளடைவில் இபி-5 திட்டம் நிறுத்தப்படும். கோல்டு கார்டு திட்டத்தின் கீழ், செல்வந்தர்கள் இந்த கார்டுகளை விலைக்கு வாங்கிக் கொண்டு அமெரிக்காவில் எளிதாக வாழமுடியும். இத்திட்டத்தின் மூலம் அமெரிக்காவிற்கு வரி வருவாய் கூடுகிறது. அதேசமயம் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும்’ என்றார். மேலும் இபி-5 குடியேற்ற முதலீட்டாளர்கள் திட்டம் குறித்து டிரம்ப் கூறுகையில், ‘இபி-5 திட்டமானது முட்டாள்தனமானது. மோசடிகளால் நிறைந்துள்ளது. குறைந்த விலையில் கிரீன் கார்டைப் பெறுவதற்கான சாத்திய கூறுகள் இந்த திட்டத்தில் உள்ளன. எனவே அபத்தமான இபி-5 திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம். அதேநேரம் இத்திட்டத்தை கோல்டு கார்டு திட்டமாக மாற்றவுள்ளோம்’ என்றார். டிரம்ப் அறிவித்துள்ள கோல்டு கார்டு திட்டமானது, எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
அமெரிக்காவை சேர்ந்த சில நிபுணர்கள், கோல்டு கார்டு திட்டமானது அமெரிக்க வர்த்தக நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்றும், அதேசமயம் கோல்டு கார்டு திட்டமானது சமூக மற்றும் நெறிமுறை அம்சங்களை கேள்விக்குள்ளாக்கும் என்றும் கூறியுள்ளனர். டிரம்பின் தேர்தல் வாக்குறுதியின்படி, குழந்தைகள் தானியங்கி குடியுரிமையை பெற வேண்டுமானால் பெற்றோர்களில் ஒருவர் அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும். அல்லது சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளராக (கிரீன் கார்டு வைத்திருப்பவர்) இருக்க வேண்டும். ஆனால் அமெரிக்க நிரந்தர குடியுரிமை பெறாத தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைக்கு குடியுரிமை வழங்கப்படாது. இத்திட்டம் அமல்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், பல நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. அதேநேரம் டிரம்பின் கோல்டு கார்டு திட்டத்தால், கிரீன் கார்டு பெறுவதற்காக விண்ணப்பித்திருந்த 10 லட்சம் இந்தியர்கள் எதிர்காலம் என்னாகும் என்ற கேள்வியும், குடியுரிமை பெறுவதற்காக ரூ.37.5 கோடி செலுத்த அவர்களால் முடியுமா? என்பதும் கேள்வியாகி உள்ளது.
The post அமெரிக்காவில் குடியுரிமை பெற வேண்டுமானால் ரூ.43 கோடி கொடுத்தால் ‘கோல்டு கார்டு’ அங்கீகாரம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு! appeared first on Dinakaran.