வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவதில் டிரம்ப் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், குடியேற்ற நீதிமன்றத்தின் 17 நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் அதிபராக டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளார். இதற்காக குடியேற்ற அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் வழங்கி உள்ளார்.
அவர்கள் பல்வேறு மாகாணங்களிலும் கடும் சோதனை நடத்தி, தொழிற்சாலைகளில் துருவித் துழாவி உரிய ஆவணம் இல்லாமல் தங்கியிருப்பவர்களை நாடு கடத்தி வருகின்றனர். மேலும் மெக்சிகோவை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் குடியேற்ற நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் நாடு கடத்தப்படுவார்கள்.
இந்நிலையில், கடந்த ஓரிரு நாட்களில் 10 மாகாணங்களில் குடியேற்ற நீதிமன்றங்களில் 17 நீதிபதிகளை டிரம்ப் அரசு பணிநீக்கம் செய்திருப்பதாக சர்வதேச தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப பொறியாளர்கள் கூட்டமைப்பு எனும் தொழிற்சங்கம் குற்றம்சாட்டி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 15 நீதிபதிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகவும், திங்கட்கிழமை 2 பேர் நீக்கப்பட்டதாகவும் கூறி உள்ளது.
அவர்களின் பணிநீக்கத்திற்கான எந்த காரணத்தையும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. அமெரிக்காவில் மொத்தம் 71 குடியேற்ற நீதிமன்றங்களில் 600க்கும் மேற்பட்ட நீதிபதிகள் உள்ளனர். அவர்களில் தங்களுக்கு எதிரானவர்களை டிரம்ப் நிர்வாகம் பணிநீக்கம் செய்வதாகவும் இது முட்டாள்தனமானது என்றும் பொது நலனுக்கு எதிரானது என்றும் தொழிற்சங்க தலைவர் மாட் பிக்ஸ் கூறி உள்ளார். இதற்கிடையே, லாஸ் ஏஞ்சல்ஸில் சட்டவிரோத குடியேறிகளை கைது செய்ய அனுப்பப்பட்ட 2,000 தேசிய காவல்படை வீரர்களை திரும்ப பெறுவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
The post அமெரிக்காவில் குடியேற்ற நீதிமன்றத்தின் 17 நீதிபதிகள் பணிநீக்கம்: டிரம்ப் நிர்வாகம் கெடுபிடி appeared first on Dinakaran.