வாஷிங்டன்: அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களில் அந்நாட்டின் தேச விரோத கொள்கையை ஆதரித்தவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதால், சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட, லைக் போட்ட இந்திய மாணவர்களின் நிலை என்னாகும்? என்பது கேள்வியாக உள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘காசா போரில் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனர்களை ஆதரித்தவர்கள், இஸ்ரேலை விமர்சித்தவர்கள் மற்றும் அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் போர் முடிவுகளை விமர்சிக்கும் நபர்கள், சமூக ஊடக கணக்குகளில் தொடர்புடைய சமூக ஊடக இடுகைகளை லைக் செய்து பகிர்ந்து கொண்டவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படுகிறது.
இந்த பட்டியலில் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து தங்கிப் படிக்கும் மாணவர்களும் அடங்கும். மேற்கண்ட விவகாரங்களில் தொடர்புடைய மாணவர்களின் எப்-1 விசாக்களை ரத்து செய்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக, அமெரிக்க அகதிகள் மற்றும் தேசிய இனச் சட்டத்தின் பிரிவின்படி சம்பந்தப்பட்ட மாணவர்களின் எப்-1 விசா உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாணவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு முன், தங்களது பாஸ்போர்ட்டை அமெரிக்க தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் காட்ட வேண்டும்.
அவர்களே உங்கள் விசாவை ரத்து செய்வார்கள். பின்னர், சிபிபி என்ற செயலியின் உதவியுடன் நீங்கள் சுயமாக நாடுகடத்தல் செயல்முறையை பயன்படுத்தி அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும். ஒருவேளை நீங்கள் அமெரிக்காவை விட்டு போகவில்லை என்றால், நாங்கள் உங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவோம். அவ்வாறு நாங்கள் வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டால், நீங்கள் உங்கள் தாய்நாட்டை அடையாமல் போகலாம். எங்களுக்கு வசதியான வேறு எந்த நாட்டிற்கும் உங்களை அனுப்பி வைப்போம். அவ்வாறு அனுப்பி வைப்பது எங்களது விருப்பமாக மாறிவிடும்’ என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின்னர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் திட்டம் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. சட்டவிரோத குடியேறிகள் பட்டியலில் இருந்த இந்தியர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். இந்த நிலையில் அமெரிக்க அரசாங்கம் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை திடீரென ரத்து செய்துள்ளது; அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும், தேச விரோத கொள்கைகளை ஆதரிப்பவர்கள் அமெரிக்காவில் இருக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அரசுக்கு எதிராகவும், ஹமாஸ் – பாலஸ்தீன விவகாரம் தொடர்பாக பதிவுகளை வெளியிட்டவர்களும், இஸ்ரேலை விமர்சித்தவர்களும் சுயமாக நாடுகடத்தப்படும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், இந்திய மாணவர்களும் உள்ளதால், அவர்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த 2023-24ம் ஆண்டிற்கான சர்வதேச மாணவர்கள் குறித்த ‘ஓபன் டோர்ஸ்’ அறிக்கையின்படி, அமெரிக்காவில் 1.1 மில்லியன் சர்வதேச மாணவர்கள் உள்ளனர். இவர்களில் 3.31 லட்சம் பேர் இந்திய மாணவர்கள் உள்ளனர். இவர்களில் எத்தனை பேர், மேற்கண்ட புதிய உத்தரவின் கீழ் நாடு கடத்தப்படுவார்கள் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
வலையில் சிக்கிய இந்திய மாணவர்கள்;
பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸுக்கு ஆதரவாக போராட்டங்களில் பங்கேற்ற 8 மாணவர்கள் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இந்திய மாணவராகிய பத்ர் கான் சூரி என்பவர் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். வர்ஜீனியாவில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். ஹமாஸின் சித்தாந்தத்தை ஆதரித்து சமூக வலைதளங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இவரது மனைவி பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர் என்பதால், இதுபோன்ற பதிவுகளை அவர் வெளியிட்டு வந்தார். தற்போது கைது செய்யப்பட்ட பத்ர் கான் சூரி, லூசியானாவில் அமைந்துள்ள நிவாரண மையத்தில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது சூரியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், அவரை வலுக்கட்டாயமாக இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என்றும் அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ள
னர்.
* இந்திய குடிமகனான ரஞ்சனி சீனிவாசன் என்பவர், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார். பல்கலைக்கழக விடுதியில் இருந்தபோது அவரிடம் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை நடந்த பிறகு, அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததற்காக அவரது விசா ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதற்கான ஆதாரங்கள் வெளியிடப்படவில்லை. தன் மீதான குற்றச்சாட்டுகளை ரஞ்சனி சீனிவாசன் மறுத்தார். ஹமாசுக்கு ஆதரவான போராட்டங்களில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், தான் சுயயாக நாடுகடத்தல் திட்டத்தின் கீழ் இந்தியா திரும்பியதாகக் கூறினார்.
The post அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் தேச விரோத கொள்கையை ஆதரித்தவர்களின் ‘விசா’ ரத்து: டிரம்ப் அதிரடி; ‘லைக்’ போட்ட இந்திய மாணவர்கள் பீதி appeared first on Dinakaran.