வாஷிங்டன்: அமெரிக்காவுடன் மல்லுகட்டியதால் சீனாவுக்கான இறக்குமதி வரியை 245 சதவீதமாக அதிகரித்து அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த வர்த்தக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது சீனாவின் கையில் இருப்பதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2ம் தேதி பரஸ்பர வரி விதிப்பை அறிவித்த நிலையில், பல நாடுகளும் டிரம்பிடம் சரணாகதி அடைந்தன. 75 நாடுகள் ஒப்பந்தம் செய்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றதால் பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். ஆனால் சீனா மட்டும் அமெரிக்காவை எதிர்த்து நின்றது.
அமெரிக்காவுக்கு முக்கிய தாதுக்கள், உயர்தொழில்நுட்ப பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்துவதாக அறிவித்தது. ஹாலிவுட் படங்களுக்கு தடை விதித்தது. உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா மீது புகார் அளித்தது. சீன இறக்குமதிகளுக்கு அமெரிக்கா 145 சதவீதமாக வரியை உயர்த்திய போது, சீனா சற்றும் அசராமல் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 125 சதவீதமாக வரியை அதிகரித்தது. இந்த பதிலுக்கு பதில் நடவடிக்கையால் உலகின் மிகப்பெரிய இரு பொருளாதார நாடுகள் இடையே வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் போயிங் நிறுவன விமானங்களை வாங்க வேண்டாமென சீன விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில் இதற்கு பதிலடியாக சீன இறக்குமதிகளுக்கான வரியை 245 சதவீதமாக அதிகரித்து வெள்ளை மாளிகை நேற்று அறிவிப்பு வெளியிட்டது. சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைகளின் விளைவாக அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245 சதவீத வரியை எதிர்கொள்கிறது என வெள்ளை மாளிகையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து டிரம்பின் கருத்துக்களை செய்தியாளர்களிடம் கூறிய வெள்ளைமாளிகையில் ஊடக செயலாளர் கரோலின் லீவிட், ‘‘சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைகளால் மட்டுமே இந்த விவகாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைக்காக தன்னை அணுகுமாறு டிரம்ப் ஏற்கனவே சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனவே முடிவு சீனாவின் கையில் உள்ளது. சீனா எங்களுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். நாங்கள் அவர்களுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டியதில்லை’’ என்றார்.
* பிரச்னையை தீர்க்க வேண்டுமானால்
அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும்: சீனா பதிலடி
சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான் அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்கா உண்மையிலேயே பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்க்க விரும்பினால், அதிகபட்ச அழுத்தம், அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தை சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர நன்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். அமெரிக்காவால் தான் இந்த வரி யுத்தம் தொடங்கப்பட்டது’’ என்றார்.
* புதிய சர்வதேச வர்த்தக பிரதிநிதி நியமனம்
சீனாவுக்கான இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 245 சதவீத வரியை அதிகரித்த நிலையில், சீனா நேற்று புதிய சர்வதேச வர்த்தக பிரதிநிதியாக லி செங்காங்கை நியமித்துள்ளது. கடந்த 2020ல் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற வாங் ஷோவெனுக்கு பதிலாக செங்காங் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை சீனா தொடங்குவதற்காக அறிகுறியாக இது பார்க்கப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
The post அமெரிக்காவுடன் மல்லுகட்டியதால் சீனாவுக்கு 245% இறக்குமதி வரி: அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.