சீனா: பரஸ்பர வரி விதிப்பு முறையை டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக போருக்கு தயாராக உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின் அதிரடி அறிவிப்புக்கு பின்னணி; அமெரிக்க அதிபராக டொனல்டு டிரம்ப் முதல் பதவி காலத்தில் தான் சீனாவுடனான வர்த்தக போர் தொடங்கியது. அப்போதே சுதாரித்து கொண்ட சீனா, உணவு பொருள் இறக்குமதியை குறைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.
உணவு பொருட்கள் விநியோகத்தை விரிவுபடுத்துவது, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, உணவு ‘பாதுகாப்பை வலுப்படுத்துவது ஆகிய 3 முக்கிய இலக்குகளை சீனா நிர்ணயித்தது. உணவு பொருட்களை வீணாக்குவதை தடை செய்யும் புதிய சட்டத்தை மிக தீவிரமாக நடைமுறைப்படுத்தியது. உணவு பொருள் கொள்முதலை பரவலாக்க திட்டமிட்ட சீனா, கோதுமை மற்றும் பார்லி ஆகியவற்றை ரஷ்யாவில் இருந்தும், சோளத்தை பிரேசிலில் இருந்தும் இறக்குமதி செய்ய தொடங்கியது. அமெரிக்காவின் சோயாவின் இறக்குமதியை குறைக்கும் வகையில் கால்நடை தீவனத்தில் சோயாவின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்தது.
மேலும், மரபணு மாற்றப்பட்ட சோயாவின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் உணவு பொருட்களுக்கான அமெரிக்காவையே நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலைமையை சீனா உருவாக்கி உள்ளது. அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பாகவே அந்நாட்டு உணவு பொருள் இறக்குமதியை குறைத்துவிட்டு சீனா, மொத்த தானிய உற்பத்தி அளவை 70 கோடி மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக உயர்த்தி உள்ளது.
மீன்களுக்கான தீவன இறக்குமதியை 7% அளவுக்கு குறைக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது. அதிபர் டிரம்ப் சீன இறக்குமதி பொருட்களுக்கு 10% கூடுதல் வரி விதித்த நிலையில், அமெரிக்கா இறக்குமதி உணவு பொருட்களுக்கு 10 முதல் 15% கூடுதல் வரி விதிப்பை சீனா அறிவித்தது. அதுமட்டுமின்றி 15 அமெரிக்க இறக்குமதி நிறுவனங்களுக்கு தடையும் விதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் அமெரிக்க வர்த்தக போரை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக சீனா கூறியது.
The post அமெரிக்காவுடன் வர்த்தகப் போருக்கு தயார்: சீனாவின் அதிரடி அறிவிப்புக்கு பின்னணி என்ன? appeared first on Dinakaran.