உக்ரேன் போரை இழுத்தடிக்க ரஷ்ய அதிபர் புட்டின் ஆயத்தமாகி வருவதாக அமெரிக்க வேவுத் துறை தெரிவிக்கிறது.
உக்ரேனின் டான்பாஸ் வட்டாரத்தோடு போரை அவர் நிறுத்திவிடமாட்டார் என்றும் உக்ரேனில் மோல்டொவா பகுதியில் உள்ள ரஷ்யக் கட்டுப்பாட்டு வட்டாரத்திற்குத் தரைப்பாலம் ஒன்றை அமைக்க புட்டின் உறுதிபூண்டு இருக்கிறார் என்றும் அமெரிக்க வேவுத் துறைத் தலைவர் அவ்ரில் ஹானிஸ் கூறினார்.
உக்ரேனுக்கான மேற்கத்திய ஆதரவை அறவே ஒழித்துக்கட்ட தன்னுடைய முழு நாட்டையும் திரட்டி புட்டின் பாடுபடுவார். இந்த முயற்சியில் ராணுவ சட்டத்தையும் அவர் விட்டுவைக்கமாட்டார் என்று அமெரிக்க வேவுத் துறை கணிக்கிறது.
டான்பாஸ் என்ற உக்ரேனின் கிழக்கு வட்டாரத்தில் ஒருமித்த கவனத்தைச் செலுத்துவது என்ற புட்டினின் முடிவு தற்காலிகமானதுதான் என்று அமெரிக்க வேவுத் துறை கருதுகிறது. கருங்கடல் துறைமுகப் பகுதிகளை வெல்ல வேண்டும் என்றும் ரஷ்யப் படைகள் விரும்புகின்றன.
2014ல் மாஸ்கோ சேர்த்துக்கொண்ட கிரிமியாவுக்குத் தண்ணீர் வளத்தை உறுதிப்படுத்த புட்டின் விரும்புகிறார் என்றும் அமெரிக்க செனட் சபை ராணுவச் சேவை குழுவிடம் உரையாற்றியபோது அமெரிக்க வேவுத் துறைத் தலைவர் கூறினார்.
உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. ரஷ்யாவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இருந்தாலும் டான்பாஸ் வட்டாரத்தை முழு கட்டுப்பாட்டுக்குள் ரஷ்யா கொண்டுவந்துவிடுவதற்கான வாய்ப்புகள் தலைதூக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், உக்ரேனுக்கு மேலும் US$40 பில்லியன் உதவியை அமெரிக்க நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை அங்கீ கரித்தது. அதேவேளையில், உக்ரேனில் கார்கிவ் நகரின் வடக்குப் பகுதியில் தாக்குதல் நடத்திய ரஷ்யப் படைகளைப் பின்வாங்க வைத்து அந்த நகரைச் சுற்றி உள்ள பல கிராமங்களை மீண்டும் தாங்கள் கைப்பற்றிவிட்டதாக உக்ரேனியப் படைகள் நேற்று தெரிவித்தன.
இந்நிலையில், சுவீடன், பின்லாந்து நாடுகளுக்குச் சென்று உக்ரேன் போர் பற்றி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விவாதிப்பார் என்றும் நேற்று தெரிவிக்கப்பட்டது.
உக்ரேனில் மரியபோல் நகரில் இருக்கும் அஸோஸ்டால் எஃகு ஆலையை நேற்று ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்கியதாக வும் ஒடெசா துறைமுக நகரும் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இவ்வேளையில், உக்ரேன் போர் காரணமாக அந்த நாட்டைவிட்டு ஓடிய மக்களின் எண்ணிக்கை ஏற்கெனவே மதிப்பிடப்பட்டதைவிட அதிகம் என்று ஐநா கூறியது.