ஜெனீவா: அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் 115 % வரியை குறைத்து உள்ளன. இதன்காரணமாக இரு நாடுகள் இடையிலான வர்த்தக போர் முடிவுக்கு வந்திருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார். இதன்படி சீன பொருட்களுக்கு 34 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்தது.
இதன்பிறகு இரு நாடுகளும் தொடர்ச்சியாக வரி விகிதங்களை அதிகரித்தன. இறுதியில் சீன பொருட்களுக்கு 145 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. சீன அரசு சார்பில் அமெரிக்க பொருட்களுக்கு 125 சதவீத வரி விதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வர்த்தக போர் நீடித்து வந்தது. இதன்காரணமாக சுமார் 600 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது.