ஐக்கிய நாடுகள் சபை: அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரியை அறிவித்து சர்வதேச பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்தார். திடீரென அவர் சீனா தவிர அனைத்து நாடுகள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக அறிவித்தார். அதே சமயம், சீனா மீதான வரியை மட்டும் 145 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு பதிலாக சீனாவும் அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 125 சதவீதமாக வரியை உயர்த்தி உள்ளது.
அமெரிக்கா-சீனா இடையேயான இந்த வர்த்தக யுத்தம் குறித்து ஜெனீவாவில் உள்ள ஐநாவின் சர்வதேச வர்த்தக மைய நிர்வாக இயக்குநர் பமீலா கோக் ஹாமில்டன் கூறுகையில், ‘‘வர்த்தக முறைகள் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பில் குறிப்பிடத்தக்க நீண்டகால மாற்றங்களால் உலகளாவிய வர்த்தகம் 3 சதவீதம் குறையக் கூடும். உதாரணமாக மெக்சிகோவின் ஏற்றுமதிகள் கடுமையாக பாதிக்கப்படும். எனவே அமெரிக்கா, சீனா, ஐரோப்பா மற்றும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்ற சந்தைகளிலிருந்தும், கனடா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் மீது ஏற்றுமதிகள் கவனம் செலுத்தக் கூடும்.
இதேபோல், வியட்நாம் நாட்டின் ஏற்றுமதிகள் அமெரிக்கா, மெக்சிகோ, சீனாவிடமிருந்து விலகி மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா சந்தைகள், ஐரோப்பிய ஒன்றியம், கொரியா மற்றும் பிற நாடுகளை நோக்கி அதிகரிக்கின்றன. இந்த வர்த்தக யுத்தம் நீண்டகால பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். வரும் 2040ம் ஆண்டுக்குள் பரஸ்பர வரிகள் மற்றும் ஆரம்ப எதிர் நடவடிக்கைகளின் விளைவால் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை 0.7 சதவீதம் குறைக்கக்கூடும்’’ என்றார்.
The post அமெரிக்கா விதித்த வரிகளால் உலகளாவிய வர்த்தகம் 3% குறையும் அபாயம்: ஐநா எச்சரிக்கை appeared first on Dinakaran.