புதுடெல்லி: அமெரிக்க அதிபராக டிரம்ப் வரும் 20ம் தேதி பதவியேற்கிறார். இந்த விழாவில் இந்தியா சார்பில் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடந்தது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப்,ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசை தோற்கடித்தார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக அதிபராக பதவியேற்கிறார். அதிபராக டிரம்ப், துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் ஆகியோர் வரும் 20ம் தேதி பதவியேற்கின்றனர். இதில் இந்தியா சார்பில் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார். இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்கின்றார்.
டிரம்ப்-வான்ஸ் பதவியேற்பு குழுவின் அழைப்பை ஏற்று இந்தியா சார்பில் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.இந்த நிகழ்ச்சியின் போது டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு வெளிநாட்டு தலைவர்களுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்துவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கும் பதவியேற்பு குழு அழைப்பு விடுத்துள்ளது என்றும் ஆனால் அவர் பங்கேற்கமாட்டார் என்று மீடியாக்களில் செய்தி வெளிவந்துள்ளன. சால்வடோர் அதிபர் நயிப் புகெலே, அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலே,இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல தலைவர்களுக்கும் அழைக்கப்பட்டுள்ளனர்.
The post அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கும் விழாவில் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்: வெளியுறவு அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.