வாஷிங்டன்: உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவியை நிறுத்த அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். உலகில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வருகிறது. இதற்காக அமெரிக்கா பட்ஜெட்டில் குறிப்பிட்ட அளவு நிதியை ஒதுக்கி வருகிறது. கடந்த 2023ல் ரூ.5.17 லட்சம் கோடி நிதியை ஒதுக்கியது. இந்த நிதி அமெரிக்க பட்ஜெட்டில் சுமார் 1% ஆகும். இந்த நிதி உதவி மூலம் உலக நாடுகள் சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சி, ஊழல் எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களுக்காக இந்த நிதியை பயன்படுத்தி வந்தன. ஆனால் பதவியேற்றது முதல் தொடர்ந்து அதிரடி காட்டி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது உலக நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதி உதவிகளை உடனே நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை கடந்த திங்கள் கிழமை டிரம்ப் பிறப்பித்ததாகத் தெரிவித்துள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் அமெரிக்கா உதவியால் பலன் அடைந்த ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள பல நாடுகள் கவலை அடைந்துள்ளன. அதே போல் உக்ரைனுக்கும் வழங்கி வந்த அத்தனை உதவிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. முந்தைய அதிபர் பைடன் ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான ஆயுதம் மற்றும் நிதி உதவியை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வந்தது. தற்போது உதவியை அமெரிக்கா நிறுத்தி இருப்பது உக்ரைனுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கான அவசர உணவுத் திட்டங்கள் மற்றும் ராணுவ உதவிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு உணவு வழங்குவதற்கான திட்டத்துக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உலகளவில் பாராட்டப்பட்ட எச்ஐவி எதிர்ப்புத் திட்டத்திற்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவியும் நிறுத்தப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் 55 லட்சம் குழந்தைகளின் உயிர்கள் உட்பட 2.5 கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டன. தற்போது இந்த நிதியும் நிறுத்தப்பட்டு இருப்பதால் பெரும் பாதிப்பு உருவாகும் நிலை உள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் நியமனத்தில் திணறல்
உலகின் சக்திவாய்ந்த ராணுவத்தை கொண்ட அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சராக பீட் ஹெக்சேத்தை டிரம்ப் தேர்வு செய்துள்ளார். அவரது நியமனத்திற்காக செனட் அவையில் ஓட்டெடுப்பு நேற்று நடத்தப்பட்டது. இந்த அவையில் ஆளும் குடியரசு கட்சிக்கு 53 எம்பிக்கள் உள்ள வாக்கெடுப்பு 50-50 என சமநிலையை எட்டியது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் 47 எம்பிக்களும் ஹெக்சேத் நியமனத்தை எதிர்த்து வாக்களித்தனர். அதே சமயம், ஆளும் குடியரசு கட்சியில் 3 எம்பிக்கள் ஹெக்சேத்துக்கு எதிராக வாக்களித்தனர். இறுதியில் வழக்கத்திற்கு மாறாக துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனக்கான ஓட்டை பயன்படுத்தி ஹெக்சேத் நியமனத்தை உறுதி செய்தார். அமைச்சரவை நியமனத்தில் துணை அதிபர் வாக்களிப்பது அபூர்வமானது. இத்தகைய வாக்களித்த 2வது துணை அதிபர் வான்ஸ். பாதுகாப்பு அமைச்சர் ஹெக்சேத் மீது ஊழல், பாலியல் பலாத்காரம் என பல குற்றச்சாட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு இந்தியருக்கு பதவி
டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலையில், வெள்ளைமாளிகையின் ஊடக துணை செயலாளராக இந்திய வம்சாவளி குஷ் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்கான துணை தகவல்தொடர்பு இயக்குநராகவும், அயோவாவின் குடியரசு கட்சி தகவல்தொடர்பு இயக்குநராகவும் பணியாற்றியவர். அதிபர் தேர்தலில் டிரம்ப் முக்கியமான 7 மாகாணங்களிலும் வெற்றியை வசப்படுத்தினர். அங்கு குடியரசு கட்சியின் தகவல் தொடர்பு இயக்குநராகவும் பிரசாரங்களை கட்டமைத்தவரும் தேசாய்தான். இதனால் அவருக்கு இந்த முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலையை குறைத்தால் போர் நின்றுவிடும்
வடக்கு கரோலினாவில் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘எண்ணெய் மற்றும் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக்) சர்வதேச கச்சா எண்ணெய் விலையை குறைக்க வேண்டும். அப்போதுதான் ரஷ்யா-உக்ரைன் போரை விரைவாக முடிவுக்கு கொண்டு வர முடியும். கச்சா எண்ணெய் விலையை குறைக்காத வரை போர் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்’’ என்றார். உக்ரைன் போர் காரணமாக, மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை காரணமாக ரஷ்யாவிடமிருந்து இந்தியா போன்ற நாடுகள் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி லாபமடைகின்றன. இதன் மூலம் ரஷ்யாவும் தடைகளை தாண்டி தனது பொருளாதாரம் வீழ்ச்சி அடையாமல் கவனித்துக் கொள்ள உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த அதிரடி; உலக நாடுகளுக்கு நிதியுதவி நிறுத்தம்: உக்ரைனுக்கான உதவிகளும் நிறுத்தம் appeared first on Dinakaran.