வாஷிங்டன்: பரஸ்பர வரியிலிருந்து லேப்டாப், ஸ்மார்ட்போனுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு முறையை அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ளார். தற்போதைய நிலையில், சீனாவை தவிர மற்ற நாடுகள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர வரி 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 90 நாட்களில் பேச்சுவார்த்தைக்குப் பின் எந்தெந்த நாடுகள் மீது பரஸ்பர வரி நீடிக்கும் என்பது தெரியவரும். இந்த வரியால் உலக பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில், பரஸ்பர வரியிலிருந்து சில பொருட்களுக்கு அதிபர் டிரம்ப் விலக்கு அறிவித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு துறையினர் கூறுகையில், ‘‘ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், செமிகண்டக்டர் தயாரிக்க பயன்படுத்தும் இயந்திரங்கள், பிளாட் பேனல் மானிடர்கள் ஆகியவை பரஸ்பர வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’’ என்றனர். பிரபல எலக்ட்ரானிக் சாதனங்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் தயாரிக்கப்படுவதில்லை. இவைகளுக்கு இறக்குமதியை மட்டுமே நம்பியிருப்பதால் அதிபர் டிரம்ப் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
The post அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு லேப்டாப், ஸ்மார்ட்போனுக்கு பரஸ்பர வரியிலிருந்து விலக்கு appeared first on Dinakaran.