வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளை ஒருங்கிணைந்து, எதிர்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சர்வதேச அளவில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஐரோப்பிய நாடுகள், கனடா உள்ளிட்ட நட்பு நாடுகளின் இறக்குமதிப் பொருள்கள் மீது கடுமையான வரி விதிப்பை அவர் அமல்படுத்தி உள்ளார். இது உலக அளவில் பெரும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே கனடாவின் புதிய பிரதமராக அந்நாட்டு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மார்க் கார்னி அண்மையில் பொறுப்பேற்றார். இந்த நிலையில், கனடா தலைநகர் ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க் கார்னி, கனடாவின் இறையாண்மைக்கு ட்ரம்ப் மதிப்பளித்தால், அவரைச் சந்திக்க தயாராக இருப்பதாகவும் தற்போது சூழலில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டம் ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார். ட்ரம்ப் விரைவில், தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவார் என நம்புவதாக தெரிவித்த அவர், கனடாவின் பொருளாதாரத்தின் மீது மட்டுமின்றி, இறையாண்மை மீதும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் அவரை எதிர்கொள்ள கனடாவுடன் ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் மார்க் கேட்டுக் கொண்டுள்ளார்.
The post அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளை ஒருங்கிணைந்து, எதிர்கொள்ள வேண்டும்: ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமர் அழைப்பு!! appeared first on Dinakaran.