அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்க்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இதுதொடர்பாக இந்தியாவின் சார்பில் எந்தப் பதிலும் இதுவரை தரப்படவில்லை.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், பரஸ்பர வரிகள் குறித்து கடுமையான கருத்துக்களை தெரிவித்தார். மேலும், அமெரிக்காவுக்கு எதிராக மற்ற நாடுகள் அதிக வரிகளை விதித்து வருவதாக ட்ரம்ப் கூறினார். இப்போது அந்த நாடுகளுக்கு எதிராக அவற்றை பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், வரும் ஏப்ரல் 2- ம் தேதி முதல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று அறிவித்தார். இதன்படி, சீனப் பொருட்களுக்கு முன்னர் விதிக்கப்பட்ட 10 சதவீத வரிகளை 20 சதவீதமாக அதிபர் ட்ரம்ப் உயர்த்தியுள்ளார். மேலும், அமெரிக்காவுக்கு பென்டானில்(Fentanyl) உள்ளிட்ட வீரியமிக்க போதை மருந்துகள் கடத்தப்படுவதைத் தடுக்க சீனா போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.