வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்ற கையோடு தனது முதல் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் டிரம்ப். அதில் அமெரிக்கா வாழ் இந்தியர்களை மிகவும் பாதித்த ஒன்று பிறப்புரிமை அடிப்படையில் இனி யாரும் அமெரிக்க குடியுரிமையை பெற முடியாது என்பதுதான். இந்த உத்தரவு மூலம் பிப்.20க்கு பிறகு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இல்லாத வெளிநாட்டு பெற்றோர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இனி அங்கு குடியுரிமை கிடைக்காது.
இந்த உத்தரவு அமலுக்கு வந்தவுடன், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும். அமெரிக்க குடியுரிமையை எளிதாக பெற விரும்புவோர் தங்கள் கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு பிரசவ காலத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வர். அங்கு குழந்தை பிறக்கும் போது அதன் அடிப்படையில் அவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறுவார்கள்.
இப்போது டிரம்ப் அறிவிப்பால் அமெரிக்காவில் ‘பிரசவ சுற்றுலா’ முடிவுக்குக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. இந்த பிரசவ சுற்றுலா நடைமுறையை அதிகமாக பின்பற்றுபவர்களில் இந்தியர்கள் மற்றும் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். புதிய சட்டம் அமலுக்கு வரும் பிப். 19 தேதிக்குள் அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைக்கும் என்பதால் அதற்குள் அறுவைச் சிகிச்சை மூலம் கருவில் இருக்கும் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் அவசரம் காட்டி வருகின்றனர் அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள்.
7 மாதம் முதல் 9 மாதம் வரையிலான கர்ப்பிணி பெண்கள் அதிகமான எண்ணிக்கையில் மருத்துவமனையில் அட்மிட்டாகி வருவதாக அதிர்ச்சியானத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏனெனில் பிப்.20க்கு பிறகு நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தானாகவே அமெரிக்கக் குடியுரிமையைப் பெற மாட்டார்கள். இதனால் குடியுரிமை பெறுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய கர்ப்பிணிகள் மத்தியில் பீதி எழுந்துள்ளது.
நியூஜெர்சி நகரில் 7 மாத கர்ப்பிணி தனக்கு அறுவை சிகிச்சை மூலம் உடனே குழந்தை பிரசவிக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பல்வேறு முக்கிய நகரங்களிலும் இதே பீதி ஏற்பட்டுள்ளது. பல மருத்துவமனைகளில் அமெரிக்கா வாழ் இந்திய கர்ப்பிணிகள் உள்பட பலர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவதற்கு தேதி குறித்துள்ளனர். இதற்கிடையே பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் அதிபர் டிரம்பின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் நேற்று விவாதம் தொடங்கியது.
The post அமெரிக்க பிறப்புரிமை குடியுரிமை பிரச்னை இந்திய கர்ப்பிணிகளுக்கு முன்கூட்டியே பிரசவம்: அறுவை சிகிச்சை மூலம் பிப்.19க்கு முன் குழந்தை பெற்றுக்கொள்ள அவசரம் appeared first on Dinakaran.