நியூயார்க்: அமெரிக்க பொருட்களுக்கு 52 சதவீத வரி விதிக்கும் இந்தியா மீது பாதிக்கு பாதியாக 27 சதவீத வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி ஏற்ற பிறகு அமெரிக்க பொருட்களுக்கு அதிக அளவு வரி விதிக்கும் நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த வரி நடைமுறை ஏப்.2 முதல் நடைமுறைக்கு வரும் என்று குறிப்பிட்டார். இதையடுத்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களின் வரியை குறைத்தன. ஆனால் வரி முற்றிலும் குறைக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று பரஸ்பர வரி விதிப்பு முறையை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதன்படி அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா மீது 27 சதவீத கூடுதல் வரி விதிப்பதாக தெரிவித்தார். இந்தியா மட்டுமல்லாமல் சீனா, இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து உள்ளிட்ட 60 நாடுகள் மீது பரஸ்பர வரிவிதிப்பு சதவீதத்தை டிரம்ப் அறிவித்தார். இதுதொடர்பாக டிரம்ப் கூறியதாவது:
இது விடுதலை நாள், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தருணம். 2025 ஏப்ரல் 2ம் தேதி அமெரிக்கத் தொழில்துறை மீண்டும் பிறந்த நாள்.
அமெரிக்காவின் தலைவிதியை மீட்டெடுத்த நாள். அமெரிக்காவை மீண்டும் செல்வச் செழிப்பாக மாற்றத் தொடங்கிய நாள் என என்றென்றும் நினைவுகூரப்படும். நாங்கள் அதை வளமாகவும், நல்லதாகவும், செல்வ வளம் மிக்கதாகவும் மாற்றப் போகிறோம். அமெரிக்கா மற்ற நாடுகளில் தயாரித்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு 2.4 சதவீத வரியை மட்டுமே வசூலிக்கிறது. ஆனால் தாய்லாந்து மற்றும் பிற நாடுகளில் 60 சதவீதம், இந்தியா 70 சதவீதம், வியட்நாம் 75 சதவீதம் போன்ற அதிக கட்டணங்களை வசூலிக்கின்றன.
இந்தியாவுக்கு மிக, மிகக் கடினமானது. பிரதமர் மோடி இப்போதுதான் வந்து சென்றார். அவர் என்னுடைய சிறந்த நண்பர், ஆனால் நான் சொன்னேன், நீங்கள் என்னுடைய நண்பர், ஆனால் நீங்கள் எங்களை சரியாக நடத்தவில்லை. அவர்கள் எங்களிடம் 52 சதவிகிதம் வரியை வசூலிக்கிறார்கள். நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல வருடங்கள் மற்றும் பல தசாப்தங்களாக நாங்கள் அவர்களிடம் எதுவும் வசூலிக்கவில்லை. 7 ஆண்டுகளுக்கு முன்பு நான் பதவிக்கு வந்த போது சீனாவுடன் வர்த்தகம் தொடங்கினோம். இப்போது அவர்களுக்கும் பரஸ்பர வரி விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* இப்போது எவ்வளவு? இனிமேல் எவ்வளவு?
தற்போது இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களான எஃகு, அலுமினியம் மற்றும் வாகனங்கள் மீது 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பொருட்களுக்கு, அதாவது ஏப்ரல் 5 முதல் 8 வரையில் 10 சதவீத அடிப்படை வரி விதிக்கப்படும். அதன்பிறகு, ஏப்ரல் 9 முதல் இந்தியா ஏற்றுமதி செய்யும் அத்தனை பொருட்களுக்கும் 27 சதவீத வரி விதிக்கப்படும். இந்த கூடுதல் வரி விதிப்பு குறித்து இந்திய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தற்போது ஒரு பொருளுக்கு அமெரிக்காவில் 5 சதவீத வரி விதிக்கப்பட்டால், அது நாளை முதல் 15 சதவீதமாகவும், ஏப்ரல் 9 முதல் 32 சதவீதமாகவும் இருக்கும்’ என்றார்.
* இந்தியாவுக்கு 26% அல்லது 27 சதவீதமா?
அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு தற்போது இந்தியா சராசரியாக 52 சதவீத சுங்க வரிகளை விதித்துள்ளது. இதில் நாணயக் கையாளுதல் மற்றும் அமெரிக்கப் பொருட்களுக்கு வர்த்தக தடைகள் உட்பட அனைத்தும் இடம் பெற்றுள்ளன. இந்த சூழலில் அமெரிக்கா இப்போது இந்தியாவிற்கு 26 சதவீத பரஸ்பர கட்டணத்தை வசூலிக்கும் என்று விளக்கப்படம் குறிப்பிடுகிறது. ஆனால் வெள்ளை மாளிகை ஆவணங்களின்படி, இந்தியா மீது 27 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இந்தியா-அமெரிக்கா வர்த்தகம் ஒரு பார்வை
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக அமெரிக்கா இருந்து வருகிறது. இந்தியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் 18 சதவீதமும், இறக்குமதியில் 6.22 சதவீதமும், இருதரப்பு வர்த்தகத்தில் 10.73 சதவீதமும் அமெரிக்கா பங்கு வகிக்கிறது.
* 2023-24ஆம் ஆண்டில் ரூ.7.46 லட்சம் கோடி பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த இந்தியா, அங்கிருந்து ரூ.3.57 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்தது.
* 2022-23ல் ரூ.7.58 லட்சம் கோடி பொருட்கள் ஏற்றுமதி. ரூ.4.31 லட்சம் கோடிக்கு இறக்குமதி
* அதிகம் பாதிக்கப்படும் துறைகள்
* தங்கம்,வைரம், ரத்தினம், நகை ஏற்றுமதி
* இருப்பு பொருட்கள் ஏற்றுமதி
* மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதி
* ஆயத்த ஆடை ஏற்றுமதி
* கடல் உணவு ஏற்றுமதி
2024ம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி
* மருந்து தயாரிப்பு பார்முலாக்கள் மற்றும் உயிரியல் பொருட்கள் (ரூ.69 ஆயிரம் கோடி)
* தொலைத்தொடர்பு கருவிகள் (ரூ.55 ஆயிரம் கோடி)
* விலைமதிப்பற்ற கற்கள் (ரூ.45 ஆயிரம் கோடி)
* பெட்ரோலியப் பொருட்கள் (ரூ.35 ஆயிரம் கோடி)
* தங்கம் மற்றும் பிற உலோக நகைகள் (ரூ.27ஆயிரம் கோடி)
* பருத்தி, ஆயத்த ஆடைகள்(ரூ.23 ஆயிரம் கோடி)
* இரும்பு மற்றும் எஃகு பொருட்கள் (ரூ.23 ஆயிரம் கோடி)
முக்கிய இறக்குமதி
* கச்சா எண்ணெய் (ரூ.38 ஆயிரம் கோடி)
* பெட்ரோலிய பொருட்கள் (ரூ.30 ஆயிரம் கோடி)
* நிலக்கரி (ரூ.29 ஆயிரம் கோடி)
* வெட்டி மெருகூட்டப்பட்ட வைரங்கள் (ரூ.22 ஆயிரம் ேகாடி)
* மின்சார இயந்திரங்கள் (ரூ.12 ஆயிரம் கோடி)
* விமானம், விண்கலம், பாகங்கள் (ரூ.11 ஆயிரம் கோடி)
* தங்கம் (ரூ.11 ஆயிரம் கோடி)
* இந்தியாவுக்கு குறைவுதான் சமாளிக்கும் ஒன்றிய அரசு
ஒன்றிய வர்த்தக அமைச்சகம் சார்பில் மூத்த அதிகாரி கூறுகையில்,’ அமெரிக்கா விதித்துள்ள வரிவிகித முறை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒரு கலப்பான வரிவிதிப்பு. இந்த வரிவிதிப்பு நமக்கு பின்னடைவு அல்ல. ஜவுளி போன்ற துறைகளில் கூடுதல் வரிகளை அமெரிக்கா விதித்த பிறகும், இந்தியாவின் நிலை அதன் போட்டி நாடுகளை விட ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.
அமெரிக்காவின் கவலைகளை நமது நாடு நிவர்த்தி செய்தால், டிரம்ப் நிர்வாகம் வரிகளைக் குறைப்பதற்கு எதிராக பரிசீலிக்கலாம். இப்போது அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொருட்கள் இந்த புதிய வரிவிதிப்புக்கு உட்படுத்தப்படாது. அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியா ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது’ என்றார்.
* உலக தலைவர்கள் கண்டனம்
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்: இந்த நியாயமற்ற வரிகளுக்கு மிக பெரிய விலையை அமெரிக்க மக்கள்தான் செலுத்த போகிறார்கள். இதற்காக நாங்கள் எந்த ஒரு வரியையும் விதிக்கப்போவது இல்லை. அப்படி நாங்களும் வரியை அறிவித்தால் எங்கள் நாட்டிலும் விலை அதிகரிக்கும். வளர்ச்சி குறையும். எனவே அதை செய்ய போவதில்லை.
கனடா பிரதமர் மார்க் கார்னி: ஸ்டீல், அலுமினியம் மற்றும் ஆட்டோமொபைல்கள் மீதான அமெரிக்க வரிகள் பல லட்சம் கனடா மக்களை கடுமையாக பாதிக்கும். இதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயம் எடுப்போம். அதுவும் வெகு சீக்கிரமாக நடவடிக்கை இருக்கும்.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்: இந்த வர்த்தக போர் யாருக்கும் நன்மையை தராது. நாங்கள் அனைத்திற்கும் தயாராகவே இருக்கிறோம். எதுவாக இருந்தாலும் சமாளிப்போம். தேவை என்றால் பதிலடியும் தருவோம்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்: நாங்கள் எங்கள் நிறுவனங்களையும் தொழிலாளர்களையும் பாதுகாப்போம். சர்வதேச வணிகத்திற்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. அதேநேரம் எங்கள் தொழிலாளர்களைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
* ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன்: நாங்கள் ஒரு வர்த்தக போரை விரும்பவில்லை. அமெரிக்காவுடன் சேர்ந்து வர்த்தகம் செய்ய விரும்புகிறோம். அப்போதுதான் எங்கள் நாட்டு மக்களின் நல்வாழ்வை உறுதி செய்ய முடியும்.
* இந்தியா உறுதியை காட்ட வேண்டும் ராகுல் காந்தி கடும் விமர்சனம்
இந்தியா மீது அமெரிக்கா 27 சதவீத பரஸ்பர வரி விதித்ததற்கு எதிராக பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்துள்ளன. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், ‘அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்புகள் இந்தியப் பொருளாதாரத்தை, குறிப்பாக வாகனத் தொழில், மருந்து மற்றும் விவசாயம் போன்ற துறைகளை முற்றிலும் அழிக்கப் போகின்றன. எனவே இந்தியா மீதான பரஸ்பர வரி விதிப்பு குறித்து இந்திய அரசு என்ன செய்கிறது என்பதற்கு பதில் அளிக்க வேண்டும்.
ஒருமுறை இந்திரா காந்தியிடம் ஒருவர் கேட்டார். வெளியுறவுக் கொள்கை விஷயத்தில் நீங்கள் இடதுபுறம் சாய்வீர்களா அல்லது வலதுபுறம் சாய்வீர்களா என்றார். அதற்கு இந்திரா காந்தி,’நான் இடது அல்லது வலது பக்கம் சாய்வதில்லை, நான் நேராக நிற்கிறேன். நான் இந்தியன், நான் நேராக நிற்கிறேன்’ என்று கூறினார். எனவே அரசு உறுதியாக இருக்க வேண்டும்’ என்றார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘ பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் நட்பு, கட்டிப்பிடித்தல், சிரிப்பது,
‘மீண்டும் ஒருமுறை டிரம்ப்’ கோஷம், அமெரிக்கா ஒரு தொழிலதிபர் என்பதையும், எங்கள் வாடிக்கையாளர்(மோடி) அவரிடம் சிக்கிக்கொண்டதையும் காட்டுகிறது’ என்றார். சமாஜ்வாடி கட்சி எம்.பி., ராஜீவ் ராய்,’ ஒருதலைப்பட்ச அன்பினால் மற்றும் ஒருவரை நண்பர் என்று அழைப்பதால் நாட்டின் நம்பகத்தன்மையும் வலிமையும் அதிகரிக்காது.
அமெரிக்கா ஏன் இந்தியாவை தவறாக நடத்துகிறது என்று மோடி பதிலளிக்க வேண்டும்’ என்றார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகரிகா கோஷ், ‘மோடி அரசு அழிவு அரசியலிலும், புகைப்பட வாய்ப்பு அரசியலிலும் ஈடுபட்டு வருகிறது. அதிபர் டிரம்ப் கட்டவிழ்த்துவிட்ட இந்த கட்டணப் போருக்கு அவர்கள் எவ்வாறு பதிலடி கொடுக்க விரும்புகிறார்கள் என்பது குறித்து அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும்’ என்றார்.
* இந்தியா மதிப்பீடு செய்கிறது நிதிஅமைச்சகம் விளக்கம்
அமெரிக்கா விதித்துள்ள வரி உயர்வையும் அதன் தாக்கத்தையும் இந்தியா மதிப்பீடு செய்து வருவதாக நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு அமெரிக்காதான் முதலில். ஆனால் பிரதமர் மோடிக்கு இந்தியா தான். எனவே அமெரிக்காவால் விதிக்கப்படும் பரஸ்பர கட்டணங்களின் தாக்கத்தை நாங்கள் மதிப்பிடுகிறோம்’ என்றார்.
* இறால் ஏற்றுமதிக்கு பாதிப்பு
இந்தியாவின் உள்நாட்டு இறால் தொழிலின் மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா உள்ளது. இந்தியா மொத்த இறால் ஏற்றுமதியில், 40 சதவீதத்தை அமெரிக்காவிற்கு அனுப்புகிறது. ஈக்வடார் மற்றும் இந்தோனேசியா ஆகியவை அமெரிக்க சந்தையில் இந்தியாவுக்கு போட்டியாக உள்ளன. 2023-24 ஆம் ஆண்டில் இறால் ஏற்றுமதி 7,16,004 டன்களாக இருந்தது. ஆண்டுக்கு ரூ.21 ஆயிரம் கோடி இறால் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
* மருந்துகளுக்கு வரி விலக்கு
அமெரிக்கா பரஸ்பர வரிகளில் இருந்து இந்திய மருந்துகளுக்கு விலக்கு அளித்துள்ளது. இந்தத் துறையில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி சுமார் ரூ.76 ஆயிரம் கோடியாக இருந்தது. அதே சமயம் மருத்துவ சாதனங்களுக்கு வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
* ஏற்றுமதி நிறுவனங்கள் அதிர்ச்சி
அமெரிக்காவின் வரிவிதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என்று ஏற்றுமதி நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.சி.ரால்ஹன் கூறுகையில், ‘ புதிய வரிவிதிப்பு இந்தியாவுக்கு கடும் சவால்களை உருவாக்கும். ஆடை, ரத்தினங்கள், நகைகள், தோல், எலக்ட்ரானிக்ஸ், ரசாயனங்கள், பிளாஸ்டிக், மரச்சாமான்கள் உள்ளிட்ட சில துறைகள் புதிய வரிவிதிப்பால் கடுமையாக பாதிக்கப்படும்’ என்றார்.
* குஜராத் ரத்தின ஏற்றுமதி முடங்கும்
குஜராத்தில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக அளவு ரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அமெரிக்காவிற்கு கிட்டத்தட்ட 30 சதவீத நகைகள், ரத்தினங்கள், வைரங்கள் இந்தியாவில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.11 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் இதில் நடக்கிறது. புதிய வரிவிதிப்பால் இந்திய ரத்தினங்கள், வைரங்களுக்கு பூஜ்ஜிய வரியில் இருந்து இனிமேல் அமெரிக்காவில் 20 சதவீத வரிவிதிக்கப்பட உள்ளது. மேலும் தங்க நகைகளுக்கு கூடுதலாக 5 முதல் 5.7 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது. இதனால் குஜராத்தின் ரத்தின ஏற்றுமதி முற்றிலும் முடங்க வாய்ப்பு உள்ளதாக தங்க ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
The post அமெரிக்க பொருட்களுக்கு 52 சதவீத வரி விதிக்கும் இந்தியா மீது 27 சதவீத கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.