அமெரிக்காவில் ஜவுளி இறக்குமதிக்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஜவுளி தொழிலுடன் தமிழக அரசு துணை நிற்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் பி.கோபால கிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது: வீட்டு உபயோக ஜவுளிக்கான உலகளாவிய அங்கீகாரம் பெற்ற மையமான கரூர் ஜவுளி நிறுவனங்களில் மேஜை விரிப்புகள், சமையலறை விரிப்புகள், படுக்கை விரிப்புகள், திரைகள், பிற வீட்டு உபயோக ஜவுளிகள் என ஆண்டுக்கு ரூ.9,000 கோடிக்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் பெருமளவில், அதாவது ரூ.6,000 கோடிக்கான ஜவுளிகள் அமெரிக்கா, ஐரோப்பா ஒன்றியம் மற்றும் ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது.